காலம்

கலை இலக்கிய காலாண்டிதழ்

ஆல்பெர் காம்யூவிற்கான சிகரெட் – எஸ்.ராமகிருஷ்ணன் March 28, 2010

என் இருபத்திமூன்றாவது வயதில் ஆல்பெர் காம்யூவுடன் சேர்ந்து புகைக்க வேண்டும் என்பதற்காக தினம் ஓரு சிகரெட்டை வாங்கி வரத் துவங்கினேன்.  படித்து வேலை தேடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. 

புத்தகமும் தேநீரும் சிகரெட்டும் மனம் முழுவதும் வலியும் கூட இருந்தன. வீடு அந்நியமாகியிருந்தது. நண்பர்களிடம் பேசுவது கூட கூச்சம் தருவதாக மாறியிருந்தது. சிகரெட் மட்டுமே  துணை.  அந்த நாட்களில் நான் மிகவும் தனியனாக இருந்தேன். அந்த கோபம் என் அறையின் புற வெளியில் உலவும் சூரியன் மீது குவிந்திருந்தது. சூரியனை நான் மிகவும் வெறுத்தேன். அதன் திமிர் மற்றும் சுதந்திரம் என்னை வெறுப்பேற்றியது.

உண்மையில் நான் காம்யூவோடு ஸ்நேகம் கொள்வதற்கு சூரியனே காரணமாக இருந்தது. அறையின் தனிமை பல நேரம் சாவை பற்றியே நினைக்க செய்தது. அதனால் நானும் மரணத்தை ஓரு மாபெரும் அபத்தமாக ஊணர்ந்தேன். அந்த நிமிசங்களில் நான்தான்  அந்நியன் வழியாக மெர்சோ என்றும் மனிதனின் அதாவது என் னைப் போன்ற ஓருவனின் கதையை காம்யூ ரகசியமாக எழுதியிருப்பதாகவும் உணர்ந்தேன். தன் எழுத்துக்களை விடவும் காம்யூ மிக அமைதியான மனிதர். அவர் புகைப்படத்தில் சிகரெட் பிடித்தபடியே என்னை பார்த்து கொண்டிருந்தார். அணையாத சிகரெட் அது. அந்த புகை ஏன் அறைக்குள்ளாக சுற்றியபடியே வந்தது.

எனக்கு காம்யூ மிக தேவையாக இருந்தார். சாவு காமம் மற்றும் அன்றாட வாழ்வின் அபத்தம் இந்த மூன்றையும் பற்றி நிறைய நான் யோசிக்க காம்யூவே காரணமாக இருந்தார். நான் சில நேரம் குடிவெறியில் காம்யூவோடு சண்டையிட்டேன். காம்யூ நீங்கள் என்னை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கிறீர்கள் என்று கத்தினேன். ஓவ்வொரு நாளும் அவருக்காக ஓரு சிகரெட் வாங்கி வர துவங்கினேன். அதை அறையின் மேஜையில் போட்டுவிட்டு அவர் விரும்பிய நாள் அதில் ஓன்றை எடுத்து புகைக்க கூடும் என்று காத்திருந்தேன்.

ஒரு இரவு சாலையோர கடையொன்றில் சாப்பிட்டு திரும்பும் போது ஓரு சிறுமி, முதியவன் ஓருவனின் காலைபிடித்து கெஞ்சி கொண்டிருப்பதை கண்டேன். யார் அவள் ஏதற்காக கெஞ்சுகிறாள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் கண்களில் இருந்த துக்கம் என்னை நடுங்க செய்தது. நான் அந்த இணை கொல்ல விரும்பினேன். அவன் சிறுமியை உதைத்து தள்ளிவிட்டு பைக்கை எடுத்து சென்றான். நான் சிறுமியின் அருகில் சென்ற போது அவள் தாங்கமுடியாத ஆத்திரத்துடன் என்னை தாக்க துவங்கினாள். அவளிடம் எப்படி நடந்துகொள்வது என்று எனக்கு தெரியவில்லை.

நான் இதற்காக காம்யூவைத் தேடினேன். அன்றிரவு என் அறையில் நான் காம்யூவோடு பலத்த விவாதம் செய்தேன். காம்யூ மனிதனின் ஒரே பிரச்சனை அவனது இருப்பு தான் என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் முதன்முறையாக பயங்கொள்ள துவங்கினேன். அதன்பிறகு காம்யூவை மறந்து ஓரு பெண்ணை காதலிக்க துவங்கினேன். சில நேரம் அவளோடு பேசிக் கொண்டிருக்கும்போது காம்யூவின் நினைவு பீறிட்டபடியே இருக்கும். அதைக் காட்டி கொள்ள மாட்டேன். காதலிக்கும் போது தான் மனிதன் அதிகம் பயம் கொள்கிறான் என்ற பரிகாசமான காம்யூவின் குரல் எனக்குள் உரத்து கேட்கும் அதேபெண்ணை திருமணம் செய்து கொண்டு அரசு ஊழியனாக உத்தியோகம் தேடி கொண்டு  காம்யூவை மறந்து போனேன். பின்பு ஓருநாள் அலுவலகம் விட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும்போது காம்யூ நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் பேசினால் என் இயல்புவாழ்க்கை குலைந்துவிடும் என்று பயமாக இருந்தது. நான் காம்யூவினை தெரியாதவன் போல நடந்து சென்றேன்.
அவர் என்னை நோக்கி   ‘தன்னை தானே ஏமாற்றிக் கொள்வது பெரிய கலை’ என்று சப்தமாக  சொன்னார். அன்றிரவு காம்யூவிற்காக ஓரு சிகரெட் வாங்கினேன். அதை என்றைக்கும் போலவே மேஜையின் இழுப்பறையில் போட்டு வைத்தேன்.

காம்யூ என்னைப் பரிகசித்தது எனக்கு வலித்தது. ஆனாலும் என்னால் அழமுடியாது. காரணம் மெர்சோ ஒருபோதும் அழுவதில்லை.