காலம்

கலை இலக்கிய காலாண்டிதழ்

அனார் – கவிதை March 27, 2010

Filed under: காலம் இதழ் 34 — kaalammagazine @ 3:47 am
Tags:

ஒரு கவிதையும் :  குறிப்புகள் மூன்றும் 

என் துக்கத்தின்மீது பொழியும்
அளவு கடந்த
முரட்டுத்தனமான பனிப் பொழிவை
உன்னில் சுமத்துவதற்கில்லை

தளர்ந்த மூதாட்டியின் பொறுமையோடு
அதனை அகற்ற முயல்கிறேன்

சூறைக்காற்றினில் மூழும் காட்டுத் தீ
அடங்காமல் எரிகின்றது
உடம்பின் புலன்கள் ஒவ்வொன்றாய்
கருகும் வரை

மனக்கசப்பின் மௌனம்
குருதி அப்பிய வாள்
வேதனையை விடாமல் கீறிக் கொண்டேயிருக்கிறது

என்னால் சகித்துக்கொள்ள முடியும்
சக்திவாய்ந்த பலவானாய்

முதல் காலையில்
அனைத்துமே உண்மைகளாக இருந்தன
அடுத்த காலையில் பொய்த்தன
அனைத்துமே பொய்களாக

இரண்டின் நடுவிலும்
முழுமையாக இருக்கிறேன் நான்

நீ இரண்டிலிருந்தும் தப்பிச் செல்கிறாய்.

நடிப்பும் நடிப்பின்மையும்

சொற்களின் நடிப்பு
நம்முடைய நாடகத்தின் பிரதான பாத்திரம்

நாடகத்தின் ஒரு பகுதி நம்மை நடிக்கின்றது
மறுபகுதியை நாம் நடித்துக்கொள்கிறோம்

உனக்குப் பொருந்திப் போவதும்
நீ தேர்ந்தெடுத்ததுமான பாத்திரங்கள்
‘பத்துக்கால் மிருகம்’
‘பாலியல் மன நோயாளி’

நெருக்கத்தைச் செய்து காட்டும் நாடகம்
குரூரத்தின் காட்சிகளையும்
ஒத்திகை பார்க்கிறது
இறுதிக் கட்டத்தில்
நம்மை நடிக்கின்ற நாடகத்தை
நம்மால் நடிக்க முடியாதுள்ளது

நீ நடிப்பற்ற பாவனையில் இருப்பதாக
என்னை நம்பச்செய்யும் அதே நடிப்பையே
நான் உன்னிடமும் நடித்துக் கொண்டிருக்கிறேன்

எனது நாடக அரங்கேற்றம் மேடைகளற்றது
உனது நடிப்பு சாத்தியமான
எல்லா அரங்குகளையும்
வெற்றிகொள்ளக் கூடியது
வெவ்வேறல்ல உன் நடிப்பும் நடிப்பின்மையும்.

நிறங்களை அழுபவள்

ஏதோ மாயமான பொழுதொன்றிலிருந்து
அவள் கண்கள் நிறங்களை
அழத் தொடங்கின

தினமும் நிறத் திட்டுகள் ஊறிய
தலையணையை சுத்தப்படுத்திவிடுவதற்காக
நடுச் சாமத்தில் துயிலெழுந்து கொள்கிறாள்

இரத்தக் கண்ணீரின்
சிவந்த கறைகளைத் துடைக்க
அடிக்கடி முகத்தைக் கழுவுவதாக
கண்ணீர் கறுப்பாகச் சிந்துவதை மறைக்க
கண்களில் கோளாறு
‘கண் மை’ கரைகின்றது போன்ற
பொய்களைக் கூறுவதாகச் சொல்கிறாள்

எதிர்பாராத நேரங்களில் அது
நீலமாகவும் பச்சையாகவும்
பெருகத் தொடங்குவதால்
ஓடி ஒளிய
எல்லா நேரங்களிலும்
இருட்டை உருவாக்க முனைகிறாள்

குளியல் அறையில் வெள்ளை
சமையல் அறையில் ஊதா
படுக்கை அறையில் மஞ்சளாகி சிந்தி உதிரும்
நிறங்களின் வெம்மை

உலகின் மொத்த நிறங்களும்
அவளது கண்ணீராக மாறிய இப்பொழுதில்
நிறங்களை தீட்டுவதிலும் தேர்விலும்
அதனை விரும்புவதிலும்
அவதானமாக இருங்கள்

பொருத்தமற்ற நிறங்களை
கலப்பதில் எச்சரிக்கையாகவும்
அதேசமயம் பொறுப்பாகவும்
நடந்து கொள்ளுங்கள்

நிறங்களின் ஆன்மாவில்
கரியைப் பூசுவதுபற்றி
நிறங்களை எரியூட்டுவது பற்றிய
தந்திரங்களை தீட்டும் முன்
கண்ணாடியில் ஓர் தடவை உங்கள் கண்களை
கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

…………….

வெகு காலமாக ஒருத்தி
நிறங்களை அழுவது தொடர்பான
கடினமான வேதனை பற்றி
உங்களுக்கு எதுவும் தெரியாது என்றபோதிலும்
உங்களில் ஒருவரே
அதற்கு முழுப் பொறுப்பாளி என்பதையும்
தயவுசெய்து ஞாபகம் வைத்திருங்கள்

…………

க(ரு)றி வேப்பிலை மரத்தில்
அன்பைப் பழகுதல்

கொழுத்த மழைக்காலத்தின் பிறகு
அப்படியே செழித்து அடர்ந்திருக்கும்
இலைகள் மட்டுமேயான
கறிவேப்பிலை மரத்தினை
நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அதை ஓர் அன்பின் பெருவிருட்சமாக

எனது சமையலறை இடதுபக்க மணலில்
அது மிகவும் துணிச்சலுடன் நிற்கிறது
அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப
அதன் இலைகளை ஆய்ந்து செல்கின்றனர்
இலைகள் மணமாகவும் ருசியாகவும்
இருப்பதில் மகிழ்வுடனும் திருப்தியுடனும்

பொறுக்கித்தனமானவர்கள்
இலைகளை ஆய்வதில்லை
திருடியும் கந்துகளை
முறித்தும் விடுகின்றார்கள்

விவரம் அறியாதவர்கள்
மரத்தை எட்டி இழுத்து
குருத்து இலைகளை ஆய்கின்றனர்
குருத்துகள் எளிதில் வாடிவிடக் கூடியன

வியாபாரி வருகிறான்
மரத்தில் எந்தவொரு இலையையும் விடாது
உருவிச் செல்வதே அவனது பேராசை
அவனது தோற்றத்தில் நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும்
அவனது பேச்சில் எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும்

கொள்ளையடிப்பதே அவனது குறி

பின்பு அதே மரம்
அவனே வியந்து மிரளும் அளவுக்கு
துளிர்த்து அடர்ந்து செழித்துவிடும்
எதையுமே இழக்காத மாதிரி

நேற்று மரக்கந்துகளில் சிறு குருவிகள்
அசைந்து விளையாடின

இலைகளுக்குள் புகுந்து மறைந்து
தாவித்தாவி ஏதோவெல்லாம் பேசின
மரத்தின் ஒளிரும் முகம்
பளிச்சிடும் பிரகாசம்
ஒருபோதுமே காணமுடியா
அழகுடன் இருந்தது.