காலம்

கலை இலக்கிய காலாண்டிதழ்

பதுங்கு குழி – பொ.கருணாகரமூர்த்தி April 1, 2010

Filed under: காலம் இதழ் 34 — kaalammagazine @ 6:50 am

நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ஐயர்களை வீட்டுக்கு வரவழைத்து விமர்சையாகத் திவசங்கள் செய்வதில்லை. கோவிலில் ஒரு பூஜை, வீட்டில் ஒரு காய்கறிச் சமையல் படையலோடு சரி.

தேசத்தை விடுவிக்கவேண்டுமென்கிற உந்துதலில் விருப்பில் அவனாகத்தான் இயக்கத்தில் போய்ச் சேர்ந்தான். பயிற்சியின் பின், எப்படியும் ஒரு பத்து வருஷங்களில் தேசத்துக்கு ஒரு விடிவு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான் இத்தனை காலத்தையும் பாசறையில் கழித்தான். ஆனால், இன்னும் மூச்சா போவதென்றாலும் பொறுப்பாளன் அனுமதித்தால்தான் போகலாமென்கிற வரைமுறையை அவன் மனம் ஒப்பவில்லை. இலக்ஷியங்கள் எல்லாம் சரிதான்; நடைமுறையில்தானே வெறுப்பை உண்டாக்குகிறார்கள்? சமயத்தில் தப்பி ஓடிவிடலாமா என்றும் குறுக்குச் சிந்தனைகள் வரும். பின் இளமதிக்கு நேர்ந்ததை நினைக்க மனம் ஒரு கணம் ‘துணுக்’கென்றுவிட்டுப் பின் வாங்கும்.

அழகசிங்கத்தின் மகன் இளமதி, கிழக்கு மாகாணத்தை மெல்ல மெல்ல இழந்ததும், முடிவு தெரியாமலும் தொடர்ந்து கொண்டுமிருந்த போராட்டம் சலிப்பைத் தரவும் இயக்கத்தை விட்டு ஓடிவிடச் சமயம் பார்த்து கொண்டிருந்தான். பிரித்தானியாவிலிருந்து அவனது அத்தை அவனுக்கு, ‘நீ கொழும்புக்குப் வந்திட்டாயானால் உன்னை எப்படியாவது மத்திய கிழக்கு நாடுகளுக்கோ, இத்தாலிக்கோ நான் அனுப்பி வைக்கிறேன்’ என்று உறுதியளித்திருந்தாள்.

ஒருநாள் எல்லைக் கண்காணிப்புக்கென்று போனவன், அப்படியே தம் கால்நடையாக மன்னாருக்குப் போய் அங்கிருந்து கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தான். கொழும்பிலும், அங்கே தங்கவும் கடவுச்சீட்டு எடுக்கவும், யோகபுரம் கிராம சேவகரிடமிருந்தும் துணுக்காய் உதவி அரசாங்க அதிபரிடமிருந்தும் சில ஆவணங்கள் தேவைப்பட, மீண்டும் வன்னிக்குப் போனவன் அங்கே இயக்கத்தினரிடம் மாட்டுப்பட்டான். மீண்டும் இயக்கப்பணிகள்; ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தப்பி ஓடியவன் இரண்டாவது தடவை பிடிபட்டதும் தண்டனையாகப் படுமோசமாகத் தாக்கப்பட்டான். இசகுபிசகாக அடியெங்கோ விழுந்ததில் முள்ளந்தண்டில் தட்டுவிலகல் ஏற்பட்டு, அவனால் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாமல் போகவும் வீட்டில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போனார்கள் தோழர்கள்.

ஒவ்வொரு தாக்குதலையும் நடத்தி முடிக்கையில் தீர்ந்துபோவன வெறும் ரவைகளும் வெடிமருந்துகளும் குண்டுகளும் மாத்திரமல்ல, பல உயிர்களுந்தான். அத்தனை வேட்கையோடும் அர்ப்பணிப்போடும் தியாகத்தோடும், போராடும் ஒரு இயக்கம் ஏனோ தாம் வழங்கும் தண்டனைகளால் ஏற்படும் அபகீர்த்தியை அது சட்டைசெய்வதில்லை. இன்னும் பெற்றோரின் சம்மதமில்லாமலே பிள்ளைகளைப் பிடித்துப் போவதும், போதிய பயிற்சியில்லாமல் அவர்களைக் களத்தில் இறக்குவதையுமிட்டு, தம்மூர் மக்கள் இயக்கத்தின் மீது படுகோபமாக இருப்பது தெரிகிறது. ஊர்ப் பெரியவர்கள், கூடப் படித்தவர்கள், நண்பர்கள் எல்லாம் இப்போது அவனுடன் கண்ட கண்ட இடங்களில் காரசாரமாக விவாதிக்கிறார்கள். ‘அய்யாமாரே, அப்பாமாரே (போராளிகள் அப்படித்தான் ஊரவரை அழைக்கவேண்டுமென்பது உத்தரவு) நான் ஒரு இளநிலைப் போராளிதான். உதுக்கு பெரியவர்கள்தான் பதில் சொல்ல வேணும்’ என்றுவிட்டு அவர்களிடமிருந்து கழன்றுவிடுவான். மாதவனுக்குதான், இன்னும் சீருடையுடன் ஊருக்குள் வந்தால் யாராவது இருட்டடி போடலாம் என்றொரு பயமும் தொட்டுவிட்டிருந்தது. இனிமேல் இயக்கத்தில் இருந்துகொண்டு போராடினாலும் போராடாவிட்டாலும் மரணம் வெகு நிச்சயமாகி விட்டதை அவன் உள்ளுணர்வுகள் சொல்லின.

யோகபுரம் என்பது, 1950களின் கடைசியில் (தற்போதைய முல்லை மாவட்டம்) வவுனிக்குள நீர்ப்பாசனத் திட்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு குடியேற்றக் கிராமம். ஐந்து யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒன்வொரு யூனிட்டிலும் சராசரியாக முன்னூறு வரையிலான குடும்பங்கள் ஆதியில் குடியேற்றப்பட்டன. கொலொனிவாசிகளுக்கு இரண்டு அறைகளுடன் கூடிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பாரவுந்துகளில் அங்கே வந்து அவற்றைக் கைப்பற்ற முயன்றதும், பின் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டானதுமான ஒரு வரலாறும் அதற்குண்டு. யோகபுரத்தின் தென்மேற்குப் பகுதியை இடதுகரை என்பார்கள். இடதுகரையின் தெற்குமேற்குப் பகுதிகளில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் ஊடாட்டங்களை, அசுமாத்தங்களைக் சீருடை அணியாது நின்று கண்காணிப்பதும் தகவல் தருவதும் அவனது பணி.

பாண்டியன் குளத்தின் இடதுகரைக்குப் போகும் வயல்கள் சூழ்ந்த கிரவல் பாதையில் தனது மிதியுந்தைச் சோர்வாக மிதித்தபடி வந்துகொண்டிருந்தான். வெய்யிலின் காங்கை அழத்திக் கொண்டிருந்தாலும், பாலியாற்றை அண்மிக்கவும் அவளோடு விளையாடி அவளின் சீதளத்தைப் பகிர்ந்து வந்த காற்றலைகள் இவன் முகத்தில் ஒத்தியபோதுண்டான சுகத்தை அனுபவித்தான். பறங்கியாற்றின் படுகைகளில் கசிந்து பொசிந்து உற்பத்தியாகி வவுனிக்குளத்தை நிறைத்த பின்னால், இன்னும் பாசனக் காலத்தில் குளத்தின் பாய்ச்சல் வயல்களால் எஞ்சிவடியும் நீரையும் சேர்த்துகொண்டுபாயும் பாலியாறு, யோகபுரத்தையையும் இடதுகரையையும் பிரித்துக்கொண்டு ஓடி மன்னார் கடலில் சங்கமமாகிறது. பாலியின் படுகையில் இருக்கும் பாறைகளும், ஐந்து பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத மொத்தத்தில் மருதமரங்கள் வரிசையாக் நிற்பதுவும், இச்சமவெளியில் எத்தனை ஆயிரம் ஆண்டுகாலங்களாக ஓடியிருந்தால் இத்தனை ஆழமான பள்ளத்தாக்கை உண்டாக்கியிருக்கமுடியும் என்று அவளைக் கடக்கும்போதெல்லாம் எண்ணுவான்.

வடமத்திய மாகாணத்தில் நல்ல மழை பெய்து மல்வத்துஓயா, கனகராயன் ஆறு, பறங்கியாறு வழிந்து ஓடினாலே பாலியாறும் பெருகிக் குளிர்ந்து ஆர்ப்பரித்து ஓடும். இல்லையென்றால் அவளும் மெலிந்து இளைத்து மந்தமாகவே முனகியபடி நடப்பாள். ஆற்றின் படுகைககளில் விவசாயம் செய்வோர் பம்புகள்போட்டு கொஞ்ச நஞ்சமுள்ள நீரையும் இறைத்து எடுத்துவிடுவார்கள். இப்போதும் பாலி நலிந்துபோயே இருந்தாள். பாலிக்கொரு பாலம் அமைக்கவேண்டும் என்கிற இப்பகுதி மக்களின் ஐம்பதாண்டு காலக் கோரிக்கை, இன்னும் கோப்புக்களிலேயே பத்திரமாகக் கிடக்கிறது. மாதவன் மிதியுந்தை உருட்டிக்கொண்டு ஆற்றுக்குக் குறுக்காக நடந்தான்.

பாலியாற்றுத் தண்ணீரில் செய்யப்படும் சமையலுக்குண்டான தனிச்சுவை சொல்லிமாளாது. அவன் வீட்டோடு இருந்த காலத்தில் பலதடவைகள் மிதியுந்தில் குடத்தைக்கட்டிவந்து மொண்டுபோயுமிருக்கிறான்.

2

இந்தியா, இலங்கையுடன் பாதுகாப்பு தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பேரில் என்று சொல்லிக்கொண்டு, பாக்கு நீரிணையில் சிறிய அளவிலான தனது போர்க் கப்பல்களை நிறுத்திவைத்து இலங்கைக் கடற்படைக்கு ஏதேதோ பயிற்சிகளெல்லாம் வழங்கிக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் கடற்புலிகளும் எதற்கு வீண்வம்பென்று தமது நடமாட்டத்தை மேற்குக் கடலில் குறைந்துக் கொண்டிருந்தனர். இலங்கை இராணுவம் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி மன்னார் பிரதேசத்தில் இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் தன் படைத் தளங்களை ஸ்திரம் செய்துகொண்டதுடன்; அதன் 57வது படைப்பிரிவு (2008 டிசெம்பர் மாதத்திலிருந்து) கடற்கரையோரமாக மெல்ல மெல்ல கள்ளியடி, ஆத்திமோட்டை, முண்டம்பிட்டி என அங்குலம் அங்குலமாக முன்னேறி வெள்ளாங்குளத்தில் கனரக போர்த் தளவாடங்களுடன் நிலைகொண்டது. மேலும், மேல்நோக்கி வடக்காக ஊர்ந்து நகர்ந்த இராணுவம் நாச்சிக்குடாவில் (இது நொச்சிக்குடா என்பதன் மருவல்) கடற்கரையோரமாக நிலைகொண்டு லபக்கென இரவோடிரவாக ஜெயபுரம், கிராஞ்சி, வேரவில், சுன்னாவில், செம்பன்குன்று என்று முக்கோண வடிவிலமைந்த ஐநூறு சதுர கிலோமீட்டர் பகுதியை விடுதலைப்புலிகளின் பெரும் எதிர்ப்பில்லாமலே கைப்பற்றிக்கொண்டது.

நிஜத்தில் அப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளிடம் எல்லைக் காவலுக்கு வேண்டிய தொகையில் காப்பரண்களும் எதிர்ப்புத் தளவாடங்களும் போராளிகளும் இல்லாதது இராணுவத்தினரின் இத்திடீர் ஊடுருவலுக்கு வாய்ப்பானது. இது விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இராணுவத்தினர் தமது இந்நிலையூன்றலை மேற்குவன்னி முழுவதையும் தாம் கைப்பற்றிவிட்டதாக பிரகடனஞ் செய்ததுடன், அனைத்து ஊடகங்கள் மூலமும் பிரசாரமும் செய்தனர்.

பின் தினமும் ஜெயபுரம், கிராஞ்சி, பனங்காமம் ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவம் ஏவும் எறிகணைகள் ஆலங்குளம், உயிலங்குளம் பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. ஏககாலத்தில் மடு, பழம்பிட்டி, பெரியமடு நிலைகளில் இருந்த இராணுவத்தின் இன்னொரு பெரியஅணி (61) டாங்கர்கள், பவல் வாகனங்கள் சகிதம் பறங்கியாறு, பாலியாறு என்பனவற்றைத் தாண்டி செட்டிகுளம் நட்டாங்கண்டலை நோக்கி நகரத் தொடங்கவும் உயிலங்குளம், துணுக்காய், ஆலங்குளம், பாண்டியன்குளம், சிவபுரம், இடதுகரை, யோகபுரம் மக்கள் நிலமை பொறியில் அகப்பட்டதைப் போலாயிற்று.
இவ்விருமுனைத் தாக்குதலை சமாளிக்கப் போதிய போராளிகள் இல்லாமல் திணறிய விடுதலைப்புலிகள், வன்னியின் எல்லா ஊர்களிலுமுள்ள வீடுகளிலுமிருந்து பதினைந்திலிருந்து முப்பது முப்பத்தைந்து அகவைகள் வரையிலான திருமணமாகாத ஆண்கள் அனைவரையும் மீண்டும் பிடித்துச்செல்ல ஆரம்பித்தனர். விடுதலைப்புலிகளையே மீட்பர்களென நம்பி அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்துகொண்டும், செய்வதற்குத் தயாராகவும் இருந்த இப்பகுதி மக்களுக்கு இதனால் இயக்கம் மீதான அதிருப்தி அதிகரித்தது.

3

ஒரு மரந்தடிகூட அசையாமல், காற்று வீசாமல் அந்தகாரமாயிருந்த ஒரு மாலை வேளையில், யோகபுரத்திலிருந்து இயக்கத்துக்குப் போன போராளிகள் அழகிரியும் மாதவனும் சீருடையில்லாமல் மிதியுந்துகளில் ஆத்துப் பறந்து வந்து அனைத்து வீட்டுப் படலைகளிலும் தட்டிச் சொன்னார்கள்: ‘நாச்சிக்குடா, வெள்ளாங்குளத்திலிருந்து ஆமி உயிலங்குளம் துணுக்காய் ஒட்டன்குளம் நோக்கி ‘றவுண்ட் அப்’ பண்றான். எல்லாரும் வெளிக்கிட்டு மாங்குளத்துக்குப் போங்கோ.’
சனங்களுக்கு திகைப்பாயும் கோபமாயும் இருந்தது. சரியான உணவுப் பண்டங்கள், மருந்து, எரிபொருள் விநியோகங்கள் இல்லாவிட்டாலும் லக்ஷக்கணக்கான மக்களின் சரணாலயமாயிருக்கும் வன்னிக்கும் ஆபத்தென்றால்….
வயசானவர்கள் அரசையும் இராணுவத்தையும் நொந்து சபித்தனர்.

‘இனி வன்னிக்கும் வெள்ளிடி என்றால் எங்கே நாங்கள் போறது?’

‘ எல்லாம் பிறகு பேசலாம்; இப்போ நிண்டு கதைக்கவோ, யோசிக்கவோ ஒண்டுக்கும் நேரம் இல்லை. உங்கள் உங்கள் உயிரைக்காக்க வேணுமெண்டால் முடிஞ்ச அளவில சாப்பிட இருக்கிற பண்டங்களை, தானியங்களை, பண்டபாத்திரங்களை, உடுப்புக்களை எடுத்துக்கொண்டு கெதியில எல்லோரும் வெளிக்கிடுங்கோ.’

மக்களோடு வன்னியைக் கைப்பற்றுவதுதான் இராணுவத்தின் நோக்கமாதலால்; பின்னர் பெரிய அளவில் ஷெல்லுகள், எரிகுண்டுகள் அடிப்பதைக் குறைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் படையினர் முதலைகள் மாதிரி வீதிகளினூடாகவும் வயல்கள், காடு, கரம்பைகளூடாகவும் ஊர்ந்து நகர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தனர். அரசு இப்போது சொல்வது போன்று அவர்கள் நகர்வைத்தடை பண்ணும் விதத்தில் பெரும் தடுப்பரண்களோ, நிலக்கண்ணிகளோ போராளிகள் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கவில்லை. அத்தனை பெரும்பரப்பில் கண்ணிகளை விதைப்பதென்பதுவும் இலேசான ஒரு விஷயமுமல்ல.

போராளிகள் செறிவாக இருக்கக்கூடிய இடங்களையும், அவர்களின் ஊடாட்டங்களையும் இந்தியா சற்றலைட்டுகளின் மூலம் நுட்பமாகக் கவனித்து இலங்கை ராணுவத்துக்கு துல்லியமான தகவல்கள் தரவும், இராணுவம் ஏவிய எரிகணைகளும் ஷெல்களும் அவர்களின் பாசறைகளிலும் அவர்கள் மேலும் விழுந்து வெடித்ததன. அவர்களின் தளபதிகளுள்ளிட்ட ஆயுதம் தாங்கிய போராளிகள் நூற்றுக்கணக்கில் காவுகொள்ளப்படவும் மனவுறுதிக்குப் பெயர்போன விடுதலைப் புலிகளுக்கே பெருந்திகைப்பு ஏற்படலாயிற்று. பின்வாங்குவதைத் தவிர வேறு மார்க்கங்கள் இருக்கவில்லை.
பொதுமக்களில் பலரும், ‘நாங்கள் சரண்டைஞ்சிட்டுப்போறம்; ஒரு இடமும் இனிப்போகேலாது’ என்றனர்.

‘சரணடஞ்சாலும் ஒண்டும் நடக்காது; அத்தனைப் பேரையும் ஒண்டாய் போடுவான்.’

‘சரணடைஞ்ச ஆதிக் குடியாக்கள் நூறுபேரை பறையனாலங்குளம் உயிலங்குளத்தில ஆமி போட்டிட்டானாம்’, என்றொரு கதை பரவவும் திகைத்துப்போய்ச் சனங்கள் வேறுவழியின்றி, ‘இட்டமுடன் எம் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டான்’ என்று சபித்தபடி குடிகலைந்து வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கின.

மல்லாவியில் ஜெகதீசனும் சிவபாதமும் ஒரு சிறிய பாரவுந்தை முல்லைத்தீவு வரை வாடகைக்கு கேட்டபோது 20,000 ரூபா கேட்டார்கள். அதை அழைத்து வந்து தம் வீட்டின் முன்விறாந்தையையும் கூடத்தையும் பிரித்து; கூரை மரங்களையும் தகரங்களையும் ஓடுகளையும், கொட்டில் போடக்கூடிய மாதிரிச் சில தடி தண்டுகளையும் சேகரித்துப் அப்பாரவுந்தில் ஏற்றினார்கள். இன்னும் வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், வாளி, குடம், கம்பி அடுப்பு, கத்தி, கோடரி, பாய், தலையணை என்று ஏற்றிக்கொண்டு; தங்களதும் ஜெகதீசனின் சகோதரன் கருணாநிதி மனைவி குழந்தைகள், அயல்வீட்டுக் கோகிலத்தோடு இன்னும் இரண்டொருவரையும் ஏற்றிக்கொண்டு யோகபுரத்திலிருந்து முதலில் முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டார்கள். தண்ணீரூற்றிலும் முள்ளியவளையிலும் அவர்களுக்குச் சில உறவினர்கள் இருந்தார்கள்.

4

தென்வன்னியில் தம்மீது விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுக்காததைக் கண்ட இராணுவம் சுனாவிலிலிருந்தும் ஜெயபுரத்திலிருந்தும் நகர்ந்து நகர்ந்து அக்கராயன்குளம், குமரபுரம், உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், பரந்தன், கிளிநொச்சியிலிருந்தும் மக்களைக் விரட்ட அவர்கள் கிழக்காக தருமபுரம், உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு நோக்கி ஏ35 பாதையில் நகர ஆரம்பித்தனர்.

‘இராணுவம் பரந்தனைச் சூழ்ந்தாயிற்று. இன்னும் இரண்டே நாட்களில் கிளிநொச்சியும் விழுந்துவிடும்’ என்று ஜனாதிபதி பிரகடனஞ் செய்யவும் மக்கள் உறைந்து போயினர். இவ்விடப்பெயர்வில் பொதுமக்களை விடவும் வியாபாரிகளுக்குத்தான் திண்டாட்டம் அதிகம். எந்தப் பொருளை விடுவது, எதனை எடுத்துச்செல்வது? உழவு இயந்திரங்களையும் பாரவுந்துகளையும், துணைகொண்டு முடிந்த அளவில் தத்தமது பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரிகளும் ஜனசமுத்திரத்துடன் கலந்து கிழக்கே முன்னேறத் தொடங்கினர். வன்னிப் பிராந்தியத்தினுள், அதுவும் கிளிநொச்சியுள் இலகுவில் இலங்கை ராணுவம் நுழைந்துவிடமுடியாதென்று தெம்புடனிருந்த மக்களுக்கு, நாச்சிக்குடாவின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்தான ராணுவத்தின் நகர்வுகளும் அதிர்ச்சியளிப்பதாகவும் ஜீரணிக்கக் கஷ்டமானதாகவும் இருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தருமபுரம், விசுவமடு முத்தையன்கட்டு, உடையார்கட்டுப் பகுதிக்கு ஒரு இலக்ஷம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக வானொலிச் செய்திகள் சொல்லின. சனங்கள் அனைவரும் வெளியேறிய பின்னால் ஜனாதிபதி அறிவித்தபடி ஆயிரமாயிரம் போராளிகளின் இழப்பில் கைப்பற்றிய கிளிநொச்சியையும் ஆனையிறவையும் இராணுவம் தேனீக்கள் பறந்துவிட்ட தேன்கூட்டைப் பற்றுவதுபோல் பற்றிச் சுவைத்துக் கொண்டாடியது.

இப்போது பரந்தன், கிளிநொச்சியிலிருந்து இராணுவம் எறிகணைகளையும் ஷெல்லுகளையும் உடையார்கட்டு, தருமபுரம், விசுவமடு, திருவையாறு, முத்தையன்கட்டுப் பகுதிகளுக்கு ஏவ ஆரம்பித்தது. காட்டிலும் றோட்டிலும் வாய்க்கால் வரப்புகளிலும், தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருந்தனர். எங்கும் தீயும் புகையும் அவலமும் கூக்குரலும் கேட்ட படியிருந்தன. மக்கள் கையும் காலும் அறுந்து துடித்து விழும் வீடியோப் படக்காட்சிகள் ஐரோப்பிய, கனடிய தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படவும் உணர்ச்சி வசப்பட்டுத் தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளின் வீதிகளிலும் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர். ஐ.நாவும் மனித உரிமைகள் இயக்கங்களும் பார்த்துக் கொண்டிருக்க தினமும் கொலைப்படலம் தொடர்ந்தது. ஆனாலும், இலங்கை அரசு ஐ.நாவின் தொடர்ந்த நச்சரிப்பில் லேசாக முனகிக்கொண்டு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ஆனந்தபுரத்தை மக்களுக்கான ‘பாதுகாப்புப் பிரதேசம்’ என அறிவித்தது.

5

யோகபுரம் மூன்றாம் யூனிட் மக்களில்; இளையவர்களோ, முதியவர்களோ, நடக்கக் கூடியவர்களைத் தவிர தாமாக இயங்க முடியாதபடி இருந்த நோயாளிகளும் மிக வயசானவர்களும் பெரும் பிரச்சனையானார்கள். அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. பாபுலுக் கிழவன், ‘எனக்கு எழுபத்தைந்து வயசாச்சு; என்னால ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது. நான் இங்கேதான் கிடப்பேன். வாற ஆமிக்காரன் என்னைச் சுடுகிறதெண்டால் சுட்டுவிட்டுப்போகட்டும்’ என்று அடம் பிடித்தார். கட்டிலோடு கட்டிலாக எழுந்து நடமாட முடியாதபடி இருந்தான், முன்னைநாள் போராளி இளமதி. அவன் இப்போ இந்நாள் போராளிகளுக்கு பிரச்சனையாக இருந்தான்.

கைத்தொலைபாடல் கருவிகளில் உரையாடினார்கள். சற்று நேரத்தில் ஒரு உழவு இயந்திரத்தினை வரவழைத்து இருவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கி அதன் பெட்டியினுள் ஏற்றினார்கள். இருவரும், ‘எங்களை இங்கேயே கிடந்து சாகவிடுங்கோ’ என்று அவர்களைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ‘நீங்கள் எங்களை மன்னிக்கவேணும். ஒருவரையும் வீட்டில் இருக்கவிடப்படாதென்பது மேலிடத்து உத்தரவு.’ அன்பாகத்தான் சொன்னார்கள்; ஆனால், அவர்கள் தம்முடிவிலும் செயலிலும் உறுதியாகவே இருந்தார்கள். இவர்களின் கெஞ்சல்கள், மன்றாட்டங்கள் எதுவும் அவர்களிடம் எடுபடவில்லை. இன்னும் எவராவது தப்பி ஒட்டி இருக்கிறார்களா என்பதைப் போராளிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று பார்த்து உறுதிசெய்தனர்.

மரச் சட்டங்களால் ஒரு ஸ்டிறெச்சர் செய்து அதிலேயே படுத்தபடிக்கு இளமதி உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றப்பட்டிருந்தான். போகுமிடத்தில் பதுங்குகுழிகள் தோண்டவேண்டியிருக்கும் என்கிற கணிப்பில் மக்கள் பலரும் தங்களிடமிருந்த மண்வெட்டிகள், பிக்காஸ்களையும் எடுத்துக் கொண்டனர். கொட்டில்களில் ஆண்டுக்கணக்காக பாவனையின்றி நின்ற பல மாட்டு வண்டிகள் மாடுகளுடனும், இல்லாமல் கை இழுவையாகவும் வீதியில் நகரத் தொடங்கின. துணுக்காய் மாங்குளம் வீதி நாற்பது வருஷங்களாக பராமரிக்கப்படாது, குன்றுங்குழியுமாக இருக்கிறது. யோகபுரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம், ஐந்தாம் யூனிட்டின் உள்குறுக்கு வீதிகள் அனைத்தும் இன்னும் தார் கண்டறியாத கிரவல் மண்வீதிகளே. இழுத்து வரப்பட்ட வண்டிகள் மேடும் பள்ளமுமான கிரவல் வீதிகளில் உருளும்போது எழுப்பிய ‘நற நற’ச் சத்தம் பற்களைக் கூசவைத்தன.

ஒவ்வொரு ஷெல் வெடிக்கும் போதும், அதன் சத்தத்திலிருந்து அது எவ்வளவு தொலைவில் ஏவப்படுகிறது; ராணுவம் எவ்வளவு தூரத்திலிருக்கிறான் என்பதைத் துணிய இப்போது மக்களும் பழகிவிட்டிருந்தனர்.
யோகபுரம் மூன்றாம் யூனிட்டில் வேலுப்பிள்ளையர், சபாபதியர், செல்வநாயகம் எனும் மூன்று பேரது உழவு இயந்திரங்களே, டீசலோடும் ஓடக்கூடிய நிலையிலும் இருந்தன. ஒவ்வொரு உழவு இயந்திரங்களினதும் பெட்டிகளில் விரிக்கப்பட்ட படங்குகளிலும் சக்கரங்களின் மட்காட்களிலுமாக, வண்டிக்கு சராசரி நாற்பது பேர்கள் ஏற்றப்பட்டனர். வேலுப்பிள்ளையர் பெண்சாதி பார்வதி வன்னிவிளாங்குளம் பொங்கலுக்கென்று நேர்ந்து விளையவிட்டிருந்த பூசனிக்காய்கள் இரண்டையும் வெட்டி, எதுக்கும் உதவுமென்று தங்கள் உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் போட்டார். ஒருவாறு எல்லோரும் புறப்பட ஆயுத்தமாகையில் நடுப் பெட்டிக்குள் இருந்தபடி சாத்திரியார் கதிரேசர்: ‘எம ஓரையடா பிள்ளையள், ஒரு அரைமணத்தியாலம் பொறுங்கோ’ என்றார்.

‘எமஓரையும் கிமஓரையும் ஷெல்லுகள் மல்லாவி ஆஸுப்பத்தரிகாண வந்து வந்து விழுகுதாம். இஞ்சவர இன்னும் நேரம் கனக்க எடுக்காது’ என்று அவசரப்படுத்தினான் சாந்தன்.

‘நல்லதுக்கு குடுத்திக்காலமில்லை… தெரிஞ்சபடிக்கு செய்யுங்கோ ராசாவை.’
வெத்திலைத் தம்பர் கேட்டார்: ‘சாத்திரியாருக்கு ஊர் எங்கே ஏழாலை, மல்லாகப் பக்கமோ?’
‘எப்பிடித் தெரிஞ்சுதோ?’
‘அவைதான் உந்த ’குடுத்தி’ பாவிக்கிறவை.’
‘ஆமோ… அதெல்லாஞ்சரிதான். ஆனா, இந்தப் புறப்பாடு ஒன்றும் நல்லதுக்கு மாதிரித் தெரியேல்லை.’
பெருமூச்செறிந்தார்.

கோப்பாய் கமலா அக்கா, மேசன் வேலைக்குப் போன இடத்தில் தனது மகன் சண்முகத்தை, உடுத்துறை வேலுப்பிள்ளையர் மனுஷி பாக்கியமக்கா தன்ரை விளைஞ்ச குமரைக்காட்டி வளைச்சுப் பிடிச்சுப் போட்டாளென்று, அந்தக் குடும்பத்தோடு இப்போ பத்துப் பன்னிரண்டு வருஷங்களாகப் பேச்சல் பறைச்சல் இல்லை. மிளகாய் கன்றுகளுக்கான மேட்டு நில நீர்ப்பாசனத்தின்போது அம்பலவாணர் வீட்டுக்காரருக்கும் கந்தவனம் குடும்பத்துக்கும் பாசன நீர்ப்பங்கீட்டில் ஏற்பட்டசச்சரவு கைகலப்பாகிப்போனதால் அந்த இரண்டு குடும்பங்களும் ஆண்டுக்கணக்கில் சங்காத்தமில்லை. இப்படி அங்கங்கே அயலவைக்குள்ளே பிக்கல்பிடுங்கல்கள் இருக்கிறதும் சகஜம்தானே. ‘இனி உள்ளது வாழ்வா சாவா’ என்று ஒருவருக்கும் தெரியாத நிலையில், மூன்றாம் யூனிட்டில் ஒன்றுடனொன்று பெரிதும் சௌஜன்யமாயிராத குடும்பங்கள் எல்லாம், ஒருவரோடொருவர் என்றுமில்லாத அளவுக்கு இவ்விடப்பெயர்வுடன் அந்நியோன்யமாகினர்.
யோகபுரம், சிவபுரம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் பகுதிகளில் குடியேற்றத்திட்டங்களில் இருந்த மக்கள்; 1995 சூரியக்கதிர் தாக்குதல்/படையெடுப்பின்போது குடாநாட்டை விட்டுவந்த மக்கள்; வன்னியின் ஆதிக்குடிகளுமாக, கிழக்கு வன்னியில் வாழ்ந்திருந்த அனைத்து மக்களும் கையில் எடுக்கக்கூடிய அளவுக்குத் தானியங்கள், சாக்கு, பாய், கைலாந்தர், அன்ன பொருட்களோடு வீதிகளில் போராளிகளினதும் அவர்களின் அனுசரணையாளர்களினதும் முன்நடத்தலில் மாங்குளத்தின் திசையில் கிழக்காக நடக்கத் தொடங்கினார்கள். சரித்திரம் அறிந்திராத அவ்விடப்பெயர்வுத் தொடரில் மக்களுடன் சேர்ந்து பத்துப்பன்னிரண்டு உழவு இயந்திரங்களும், எழுபது எண்பது மாட்டுவண்டிகளும், எண்ணிக்கையிலடங்காத மிதியுந்துகளும் வந்துகொண்டிருந்தன. இழுவை மாடுகள் கிடையாதவிடத்து மக்களில் சிலர் வண்டிகளை கைகளாலேயே தள்ளிக்கொண்டு சென்றனர். ஏனைய உழவு இயந்திரங்களில் இளமதியைப் போல ஸ்டிறெச்சரினுள் ஏற்றப்பட்ட வேறும் சில உடம்புக்கு முடியாத நோயாளிகளும் முதியவர்களும் குழந்தைகளும் அணுக்கத்தில் பிரசவித்த தாய்மார்களும் இருந்தனர். இன்னும் அவற்றில் ஒவ்வொரு வீட்டுக்காரரினதும் அரிசி, கிழங்கு, காய்கறிகளடங்கிய சிறுசிறு உரப்பைகளை வைத்துக்கொண்டுவர அனுமதித்தனர். போதாத அவலத்துக்கு எங்கிருந்து ஏவுகிறார்களென்று அனுமானிக்க முடியாதபடி சில எறிகணைகளும் ஷெல்களும் ‘இஷுக் இஷுக்’ என்று அவர்கள் தலைக்குமேலால் சென்று கொண்டிருந்தன.

வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்துப் பொருட்களோடு எரிபொருள் விநியோகத்தையும் அரசு மட்டுப்படுத்தியதால் அறவே பெற்றோல் டீசல் இல்லையென்றானது. சிலர் திருட்டுத்தனமாக இராணுவத்திடம் லிட்டர் நானூறுக்கும் ஐநூறுக்கும் வாங்கிய டீசலை கொஞ்சமாக ஒளித்து வைத்திருந்தனர். இயங்கக்கூடிய சில உழவு இயந்திரங்களும் டீசல் இல்லாமையால் கொட்டில்களிலேயே கிடக்கவிடப்பட்டன.

மூன்றாம் யூனிட்டிலிருந்து புறப்பட்ட உழவு இயந்திரங்களில் வந்துகொண்டிருந்த பொன்னம்பலம் , கருணாநிதி, மரியதாஸன் , சம்பந்தன் போன்ற இளைஞர்களும் ஓரளவு சுகதேகிகளும் வவுனிக்குளம் சந்தியில் இறங்கிக்கொண்டு நடப்பதற்குச் சிரமப்பட்ட சில பெண்களையும் முதியவர்களையும் ஏற்றிக்கொண்டனர்.

இடம்பெயரும் இஜ்ஜனசமுத்திரத்தில் கணிசமான அளவில் போராளிகளும் இருக்கத்தானே வேண்டுமென கணிப்பில் இராணுவம் வீதியில் சென்றுகொண்டிருந்த சனங்கள் மீதும் தொடர்ந்து ஷெல்களை வீசித் தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கவும், சிலர் காடுகளில் இறங்கி நடக்கவும் முயற்சித்தனர். ‘ஜிவ்’வென்று கூவிக்கொண்டு மிகப் பதிவாக சில ஷெல்கள் வரவும், சனங்கள், ‘அறுதலிபிள்ளையள் ஷெல்லடிக்கிறாங்கள்டா; எல்லாரும் கீழ கிடவுங்கோ; கிட கிட கிட’ என்று கூச்சலோடு, அவை அணிஞ்சியன்குளத்திலும் ஒட்டறுத்தகுளத்திலும் இடம்பெயர் அணியின் மேல் விழுந்து வெடித்ததன. சனங்கள், ‘ஓ’வென்று போட்ட கூச்சல் நெடுநேரத்துக்குக் கேட்டது. விழுந்து வெடித்த இரண்டு ஷெல்களும் ஒவ்வொரு இடத்திலும் தலா ஒவ்வொரு உயிரைக் காவுகொண்டன. அணிஞ்சியன்குளத்தில் ஒரு பன்னிரண்டு வயசுப் பையன்; ஒட்டறுத்தகுளத்தில் ஒரு நாற்பது வயது குடும்பஸ்தர். நின்று பார்த்து ஒன்றுமாகாது. பந்தங்கள் பதறிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, சீறிய குருதியின் வெம்மை தணியமுன்னரே, வீதியோரமாக அடக்கம் செய்துவிட்டு மேலே நகர்ந்தது கூட்டம். நீண்ட இந்த மனித அணியின் மீது மீண்டும் மீண்டும் அங்கும் இங்குமாக ஷெல்கள் வந்து விழுந்த படியிருந்தன. ஷெல்லின் சிதைவுகள் பட்டு விரல்கள் அறுந்தவர்கள், விலாவில் சிராய்த்தவர்கள், கையிலோ கால்களிலோ தசைகள் பிடுங்குப்பட்டவர்களை இழுத்து வந்து வண்டிகளிலும் உழவு இயந்திரத்தின் பெட்டிகளிலும் முதலிடம் கொடுத்து ஏற்றினர். பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தனை உற்பாதங்களிருந்தும் இராணுவம் வருவதற்குள் மக்கள் எப்படியோ முன்னேறிச் சென்றுவிட்டார்கள்.

முதலில் போன உழவு இயந்திரங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வன்னி விளாங்குளத்தை அடையவே அந்தி சாய்ந்து இருட்டத் தொடங்கியது. ஷெல்களின் வீழ்ச்சியும் சற்றுத் தணிவது போலிருந்தது. எதுக்காக, எங்கே போய்கொண்டிருக்கிறோமென்று தெரியாத குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தன. அனைவருக்கும் தாங்கமுடியாத பசியும் தாகமும். தண்ணீர் மொள்ளவும் தாகந்தீர்க்கவும் அம்மன் கோவில் கிணத்தில் நீண்ட நிரையுண்டானது. அம்மன்கோவில் பொங்கலின் போது கூடுவதைவிடவும் நிறைந்த சனக்கூட்டம் ஆங்காங்கு அடுப்புகள் மூட்டி பானைகளையும் முட்டிகளையும் வைத்துக்கொண்டு கையில் எடுத்து வந்த தானியங்களை வைத்து ஏதேதோ பண்ணினர். முதலில் வெந்த பானையிலிருந்து குழந்தைகளுக்கு சாதங்கள் ஊட்டப்பட்டன. களைத்துப்போயிருந்த ஜனங்கள் அங்கங்கே துவண்டு படுத்தன. அவர்கள் தம் கால்வலி, தலைவலி, வயிற்றுவலி, அன்ன உடல் உபாதைகளையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கப் பழகலாயினர். மறுநாள் விடிகாலையிலேயே பயணம் ஆரம்பமாகியது.

7

இவ்வேளை முல்லைத்தீவில் பெருந்தொகையில் கடற்படையும் இராணுவமும் வந்திறங்கத் தொடங்கியது. அனைவரையும் விடுதலைப்புலிகள் மூர்க்கமாக எதிர்த்துப் பார்த்தனர். ஆனாலும், அவர்கள் கடலில் இருந்து ஏவிய கணைகளையும் பீரங்கியையும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இவர்கள் நாலுபடகில் புறப்பட்டால் கடற்படை நாற்பது டோறாக்களிலும் மிகைவேகங்கொண்ட பெரும்படகுகளிலும் வந்து தாக்கியது. முல்லையும் அவர்கள் வசமாகிவிட்டதென்று வானொலியில் செய்திகள் வந்தன. புலியினரின் எதிர்ப்பொன்றும் பெரிதாக இருக்கவில்லை என்பதை வானொலி மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது. ஒட்டிசுட்டானை நெருங்கும்போது முல்லைத்தீவு முற்றாக அவர்கள் வசமானது உறுதியானது. இனி அங்கு போவது அத்தனை உசிதமல்ல. முல்லைத்தீவுக்குத்தான் போகமுடியாவிட்டாலும், முள்ளியவளை தண்ணீரூற்றிலுள்ள உறவுகளுடனாவது தங்கலாமென்று வந்த ஜெகதீசனுக்கும் சிவபாதத்துக்கும் சப்தநாடிகளும் ஒடுங்கி மேற்கொண்டு என்னசெய்வதென்று தெரியவில்லை. யோகபுரத்துக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இடவசதிகள் ஏற்படுத்திக்கொடுத்த தாமே தம் வீட்டையும் பிடுங்கிக்கொண்டு புறப்படவேண்டியாகிவிட்ட அவலத்தை நினைத்தான்.

கருணாநிதியின் மனைவி கமலம், பாரவுந்தில் தங்களுடன்கூட அவனையும் வருமாறு எவ்வளவோ வற்புறுத்திக்கேட்டும் ‘தான் சனங்களோடதான் வருவேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான் அச்சமூபகாரி. அவன் மகள் ஆதர்ஷா பாரவுந்துள் பயணம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

‘ஏனம்மா அப்பா எங்களோட வரேல்லை?’
‘ இப்போ நாங்கள் எங்கே போறம் அம்மா?’
‘ஏன் இராணுவம் எங்களைத் தொரத்துது?’
‘அம்மா நீ அழுவாதை… நான் இனியொண்டுங்கேட்க மாட்டன்.’

ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு சந்திக்கு அணுக்கமாக பாரவுந்துக்காரன் இனிப்போகேலாது என்றுவிட்டு, அவர்களது பொருட்களை வீதியோரமாக இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டான். அவனையும் குறைசொல்ல முடியாது. அவனும் உயிர் பிழைக்கத்தானே பார்ப்பான்.

அனைவருக்கும் அகோரப்பசி. இருந்த பண்டங்களைக் கொண்டு, சில சுள்ளிகளைச் சேகரித்து அடுப்பு மூட்டி, சமையல் என்று சொல்லி ஒன்றைப்பண்ணிச் சாப்பிட்டுவிட்டு, அத்தனை பொருட்களையும் வீதியிலேயே கிடக்கவிட்டுவிட்டு ஒட்டுசுட்டான் பாதையில் இருவரது குடும்பமும் சனமோடு சனமாக கையில் சில அலுமினியப் பாத்திரங்களையும் இரண்டு கோணிப்பைகளையும் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினர்.

எண்பதுகளின் நடுப்பகுதியில் டேவிட் ஐயாவின் வழிநடத்தலில் யோகபுரத்திலிருந்து கருணாநிதி, குலசிங்கம், பொன்னம்பலம், செல்வரத்தினம், நவரத்தினம், அசோக், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீகாந்தன், பவான், மைக்கேல், மரியதாஸன், அரியநாயகம், சாந்தன், காசிநாதன் ஆகிய சமூக உணர்வுள்ள பதினைந்து இளைஞர்கள் காந்திய இயக்கத்தில் ஒன்றிணைந்தனர். யோகபுரம் சன சமூக நிலையம் இரவுவேளைகளில் அவர்கள் தமது கலந்தாசோனைகள் செய்யும் சந்திப்பு நிலையமுமாயிற்று. மக்களைச் சந்தித்து அவர்களுடன் சமூக சீர்திருத்தங்களின் அவசியம் பற்றிப் பேசுதல்; நாடகங்கள், வீதிநாடகங்கள் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புதல்; நீர்ப்பாசன வாய்க்கால்களில் வளர்ந்திருந்த சிறு மரஞ்செடிகொடிகளை வெட்டித் துப்புரவு செய்து நீர் சுமுகமாக ஓட வழிசெய்தல்; பொதுச் சிரமதானப் பணிகள் மூலம் தாரிடப்படாத கிராமத்தின் வீதிகளைக் கிரவல் போட்டுச்செப்பனிடுவது; எனப்பல சமூகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள் இவ்விளைஞர்கள். பின்னர் சந்திரிகா அம்மையாரின் அரசு சூரியக்கதிர் எனப் பெயரிட்டு யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடுத்தபோது, குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வன்னிநாடி வந்த மக்களுக்கு கொட்டில்மனைகள் அமைத்துக்கொடுத்தல், அங்கங்கு குழிகள் வெட்டி கழிப்பறைகளை அமைத்துக் கொடுத்தல் என மும்முரமாகப் பொதுப்பணிகள் செய்துகொடுத்தவர்கள். ஒவ்வொரு குடியேற்றக்காரர்களும் தத்தம்வளவுகளுள், நாலைந்து குடும்பங்கள் கொட்டில்களோ, ஒத்தாப்புகளோ போட்டு ஒரு முட்டியை வைத்துக்கொண்டு பிழைத்திருக்க இடம்கொடுத்த கிராமம் யோகபுரம். எல்லோரும் இளைஞர்களானதால் அவர்கள் ஒவ்வொருவரும் விடுதலைப்புலிகளின் அனுசரணையாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் என வெவ்வேறு பார்வைகளுடன் இருக்கவே செய்தனர். காந்தீய இயக்கம் விடுதலைப்புலிகளுக்கான பிரசார வேலைகளைத்தான் செய்கிறதோ என்கிற சந்தேகத்தில் இத்துடிப்பான இளைஞர்கள் அத்தனை பேரையும் கைது செய்து ஆறுமாதங்கள் சிறையில் அடைத்தது. சம்பந்தனும் ஜெகதீசனும் சிவபாதமும் பிறிதொரு இயக்கத்துக்காக நின்று உழைத்தவர்கள். அவ்வியக்கம் முடக்கப்பட்டவுடன் ஏனைய இளைஞர்களைப்போல விடுதலைப்புலிகளின் அனுதாபிகளாக இருந்தாலும் விமர்சகர்களாகத்தான் இருந்தார்கள்.

8

முல்லைத்தீவை இராணுவம் கைப்பற்றியானதும் கால்நடையாக வந்த சனம் மாங்குளம்போகாமல் வீதியைக் குறுக்கறுத்து காட்டுக்கூடாக பனிக்கங்குளம் கொக்காவில் திசையில் நடக்க ஆரம்பித்தது. சில இடங்களில் வயல்களில் வெள்ளம் நின்றது. சேறு சகதியும் சுமுகமாக நடக்கவிடாது துன்பம் செய்ததன. நாயுருவியும் தொட்டாற்சுருங்கியும் பிராண்டியதில் சனங்களுக்கு கைகாலெல்லாம் கீறலும் வலியும். அவர்களாலும் ஒரு பகல்பூரா நடந்ததில் இரணைமடு முத்தையன் கட்டுக்கே வரமுடிந்தது. மேடும் பள்ளங்களும் நிறைந்த காட்டுவழியிப்பாதைகளினூடாக வண்டிகளை உருட்டிச்செல்வது சிரமமாதலால், முதியவர்களை ஏற்றிய வண்டிக்காரர், ஒலுவமடுவரை தள்ளிச்சென்று அங்கிருந்து மேற்காக வண்டிப்பாதையில் விசுவமடுநோக்கிச் சென்றனர். பசியும் களைப்பும் காலோய்ச்சலும் சனங்களுக்கு அடுத்து எங்கே போவதென்று தெரியவில்லை.

இப்போது கருணாநிதி ராஜினாமா நாடகங்களுக்கு வேஷங்கள் போடத் தொடங்கவும், அதை நம்பிய வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓடோடி வந்து அவரைச் சந்தித்து சமாதானம் பண்ணுகிறார்.
அநேகமான உழவு இயந்திரங்களும் ஒட்டுசுட்டான் பாதையையே தேர்ந்தெடுத்தன. முதலில் சென்ற இயந்திரங்கள் உடையார்கட்டில் புதுக்குடியிருப்பில் ஆங்காங்கே சனங்களை இறக்கிவிட்டன. யோகபுரத்து இளைஞர்கள் டீசல் உள்ள உழவு இயந்திரக்காரர்களை, ‘வாங்கிற காசை வாங்குங்கோ; தயவுசெய்து திரும்பிப்போய் வண்டிகளில் வந்துகொண்டிருக்கிற உடம்புக்கு இயலாதவர்களை ஏற்றிவாங்கோ’ என்று கெஞ்சியதில், இரக்க குணமுள்ள உழவு இயந்திரக்காரர்கள் சிலர் திரும்பிவந்து அவர்களை ஏற்றிக்கொண்டு வரவும் செய்தனர்.

வேலுப்பிள்ளையரின் உழவு இயந்திரப் பெட்டிக்குள் இருந்த சின்னம்மா கிழவி, எந்நேரமும் பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருந்தார். அவரது மருத்துவத்தாதி பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த மகள் பாகேஸ்வரியை விடுதலைப்புலிகள் தமக்கான மருத்துவமனையில் பணிசெய்வதற்காக அழைத்துப்போயிருந்தனர். ‘அதன் பிறகும் இரண்டொருதரம் வீட்டுக்கு வந்துபோயிருக்கிறார். ஆனால், இப்போ ஆறுமாதமாக அவர் வரவுமில்லை; ஒரு தொடர்புமில்லாமலுமிருக்கிறாள்’ என்று இவர் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார். சீருடையில் போராளிகளை எங்கே பார்த்தாலும், ‘ராசா எங்கட பாகேஸ்வரியைப் பார்த்தியளா மோனை நேர்ஸு. அவளை ஒருக்கா வந்து என்னை வந்து பார்த்திட்டுப்போகச்சொல்லுங்க ராசா; ஒருக்காப்பாத்திட்டுப் பிறகு அவள் எத்தினை நாளைக்கெண்டாலும் உங்களோடை அங்கே நிக்கட்டும்’ என்று அரற்றுவார்.

‘முன்னொருக்கால் சுனாமி எண்டு புதுப்பேரோட ஒண்டு வந்து அள்ளிக்கொண்டு போச்சுது சனங்களை… இப்போ இந்தப் போர் இடியேறு வந்ததாலை மனுஷனே மனுஷனைக் கொல்லுறான். புத்தனுடைய சிலைகள் பரவின அளவுக்கு, அவன் போதனைகள் பரவவில்லையே நாட்டில. இட்டமுடன் எம்தலையில் இன்னபடி என்றெழுதி விட்ட சிவன் செத்துவிட்டானோ’ என்று புலம்பினார் சின்னத்தம்பி கிழவன்.

செல்வநாயகத்தார் சொன்னார்: ‘இவங்கள் தங்களாலை ஏலாதெண்டால் சர்வதேச சமூகத்தைக் கூப்பிட்டு இனி நாங்கள் சமாதானமாய் போறம்… நீங்கள் தாற எதையென்றாலும் கெதியாய்த் தந்து தொலையுங்கோ என்று சொல்லவேண்டியதுதானே… ஏன் இப்பிடிச் சனங்களைத் தெருவிலும் காட்டிலுமா உத்தரிக்க விட்டு அதுகளின்ரை பழியையும் தலையில் அள்ளிக்கட்டுறாங்கள். இறுதி யுத்தம், ஆயுதம் வாங்கவேணுமென்று வெளிநாட்டுச் சனத்திட்ட வறுகினது போதாதென்று எங்களிட்டயுமல்லே அள்ளினவங்கள். அப்ப வாங்கின ஆயுதங்களை எடுத்துவைச்சு ஆமியைத் திருப்பி விரட்ட வேண்டியதுதானே?’

‘அப்பிடியில்லை நாயகத்தார். நமக்கு ஆயுதங்கள் வந்த கப்பலுகளை இந்தியாவும் அமெரிக்காவும் மூழ்கடிச்சுப் போட்டாங்கள்லே. அதோட, ஆயுதங்கள் மட்டுமில்லை, போராடுகிறதுக்கு போராளிகளும் வேணும். எங்களுடைய சுதந்திரத்துக்காகத்தான் அவங்களும் ஊணுறக்கமில்லாமல் காடுகரம்பையென்று அலைந்தும் தங்களின் உயிரைக் கொடுத்தும் போராடுறாங்கள். அதைத்தான் எல்லாரும் கண்கொண்டு பார்க்கிறம். இன்னும் இருக்கிற குறைநிறையை, போதாமையை எப்படி நாம நிவர்த்திக்கலாமென்று சிந்திக்கவேணுமேயொழிய, சும்மா ஒரு பக்கத்தால தட்டையாய் சிந்திக்கிறதாலயும் பேசுறதாலயும் பிரயோசனமில்லை.” பொன்னம்பலம் சொன்னான்.

செல்வநாயகம், ஒருநேரம் யோகபுரம் கிராமசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவில் சுயேச்சையாய் நின்று போட்டியிட்டு மண் கவ்வினவர். அவரின் உழவு இயந்திரத்தில் வரவேண்டி இருந்ததால் யாரும் அதற்கும்மேல் அவருடன் விவாதிக்க வேறுயாரும் முனையவில்லை. ‘போராளிகளின் காதில் விழுந்தால் உதைபடுவார்’ என்று மட்டும் நினைத்தனர்.
இளமதி, ‘அப்பா இந்த உற்பாதங்களைக் காணாமல் செத்துப்போனதுதான் நல்லது’ என்று நினைத்தான். அவனது அப்பா அழகசிங்கமும் நெடுங்காலமாக இயக்கத்துக்குத் தேவையான பொறியியல் உதவிகள், மருத்துவமனை ஆயுதக்கிட்டங்கிகள் பாதுகாப்பு அரண்கள், அன்ன விஷேச பாதுகாப்பு பங்கர்களின் கட்டுமானப்பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்தார். அக்காலத்தில் அவருடைய குருதியில் கொழுப்பின் அளவு அபரிமிதமாக ஏறிக்கொண்டிருந்தது. போர்க்காலச் சூழலில் அதைக் கவனிக்கவோ, தணிப்பதற்கான வைத்திய உதவிகளைப் பெறவோ முடியாமல் போனதில் திடீரென ஒருநாள் வந்த மாரடைப்பு அவருக்கு மரணத்தையும் கொண்டு வந்தது. ‘இப்போது அவரும் இருந்திருந்தால் மனசு மிகக் கஷ்டப்பட்டிருப்பார்’ என அவன் நினைத்துக்கொண்டான்.

கருணாநிதி மட்டும் சாத்திரியாரைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

‘சாத்திரியாரே இத்தனை மனித அவலம் எதனாலை வந்தது. எந்தத் தோஷக் கிரகம் பார்த்ததுங்கோ… புதுசா வால்வெள்ளி ஏதும் முளைச்சதால இப்படியாகுதா; இதுக்கு உங்கள் சாஸ்திரம் என்னதான் சொல்லுது?’

9

முதலில் முல்லைத்தீவுக்கெனப் புறப்பட்ட ஜெகதீசன் குடும்பமும் கருணாநிதியின் குடும்பமும் சிவபாதம் குடும்பமும், உடையார்கட்டில் சந்தித்துச் சேர்ந்துகொண்டன. உடையார்கட்டை அடைந்த சனத்தில் இடைவழியில் காயம் பட்டவர்களை அங்கிருந்து புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தரிக்கு அனுப்பினர் தொண்டர்கள். அங்கும் உயிர்காக்கும் மருந்துகளோ, வேண்டிய அளவுக்கு மருத்துவர்களோ இல்லாமல் திணறிக்கொண்டிருந்தது ஆஸ்பத்தரி. அதன் வளவுக்குள் இருந்தாலே போதும் என்கிற மனநிலையில் இருந்த காயம்பட்டவர்களில் பலரும் தரையிலும் நெகிழித்தாள்களிலுமாகக் கிடத்தப்பட்டிருந்தனர். சிலர் வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சாக்கு அல்லது பாய்களை விரித்தும் கிடத்தப்பட்டனர். சனங்களிடம் பணமில்லை; கடைகளில் பொருகளில்லை; குளிப்பில்லை; தூக்கமில்லை; உத்தரித்தலைந்தனர். அதுவும் குழந்தைகளை வைத்திருந்த குடும்பங்கள் பட்டதுயரம் சொல்லி மாளாது.

மக்களுடன் போராளிகளும் இருக்கிறார்கள் என்று சொல்லி, அரசு, இரசாயனக் குண்டுகளையும் ஷெல்களையும் வீச வீச அப்பிரதேசத்தில் மரணங்கள் மேலும் மலிந்தன. அவயவங்களை இழந்த மக்களும் விலங்குகள் போல் இறந்த மக்களும் இறைந்து கிடந்தனர். அத்தனை கேவலமாகத் தமிழ் உயிரின் விலையும் மதிப்பும் தாழ்ந்துபோய் இருந்தது. இறப்பவர்களுக்காக அழவும் அவர்களை எடுத்துப் புதைக்கவும் மனிதர் இல்லாது போயினர்.

புதுக்குடியிருப்பு சந்தைப் பள்ளிக்கூடம் எல்லாம் சனங்கள் நிரம்பி வழிந்தார்கள். அங்கிருந்து மந்துவில் இரட்டைவாய்க்கால் வெள்ளாம்புள்ளி வட்டுவாகல்வரையில் வீதி நிறைந்த சனக்கூட்டமாக இருந்தது. அரசு புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தரியில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதற்காக அதற்கும் குண்டுவீசி அதை நிர்மூலம் செய்தது.
‘புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தரி மீது எதற்காக குண்டுகளை வீசினீர்கள்?’ என வெளிநாட்டுப் பத்திரிகையாள் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தாபாய ராஜபக்ஷவிடம் கேட்டபோது, ‘புதுக்குடியிருப்பு போர்வலயம். அங்கு ஆஸ்பத்தரியெல்லாம் மூடியாகிவிட்டது. அங்கு போகவும் மருத்துவம் பார்க்கவும் யாருக்கும் அனுமதியில்லை. அங்கு குண்டுகள் விழுவதையிட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை யார் அங்கே போகச் சொன்னார்கள்?’ என்று கோபமாகக் கேட்டார்.

விசுவமடு, தருமபுரம், உடையார்கட்டு, தேவிபுரத்தில் மரணங்கள் மலியவும் உழவுஇயந்திரங்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டன. சனங்கள் பெருவாரியாக காட்டைக் குறுக்கறுத்தும் வயல்களினூடாகவும் வள்ளிபுனம், புளியம் பொக்கணை, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மாத்தளன், புது மாத்தளன் என்று இடம்பெயர்ந்தார்கள். பாதைகள் ஒன்றும் சுமுகமானதாக இல்லை. பெரும்பாலான வயல்களில் வெள்ளம் நின்றது. எங்கும் சேறு சகதியும் சதுப்பும்.
தண்ணீரூற்றுலிருந்து வந்த சனங்கள் முல்லைத்தீவு, நந்திக்கடல், வட்டுவாகல் கடலேரிக்கரையோரம் முழுவதும் துருவங்களில் பெங்குயின்கள் நின்றதுபோல நிற்கலாயினர். அங்கும் ஷெல்கள் வந்து விழத்தொடங்கவும் சனக்கூட்டம் கடற்கரையோரமாக வடக்காக மாத்தளன் முல்லைவாய்க்கால் நோக்கி நகர்ந்தது. புதுமாத்தளன், மாத்தளனில் கூடிய சனங்களின் தொகை ஒன்றரை லக்ஷம் வரையிலாவது வரும். ஒதுங்க இடமில்லாதிருந்தவர்களை வெய்யிலும் தம்பாட்டுக்கு வாட்டியெடுத்தது. பசியில் சனங்கள் முசுட்டை, கொவ்வை, முள்ளுக்கீரை, முருங்கையிலை, வாழைக்குருத்து, தண்டு, கிழங்கு போன்றவற்றையெல்லாம் அவித்தும் அவியாமலும் சாப்பிடத் தொடங்கினார்கள். இன்னும் போவதாயின் கிழக்குக் கடலுக்குள் இறங்குவதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்றானது. ‘இனியும் எங்களை எங்கே போகச் சொல்லுது அரசு?’ ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

கலைஞர் குழாம் டில்லிக்குச் சென்று பேசி, அவர்கள் தாங்கள் ‘ஸ்ரீலங்கா அரசிடம் போரை நிறுத்தச் சொல்லுகிறோமென்று உறுதிமொழி’ வழங்கியவுடன் திரும்பிவந்து மெல்ல வேஷங்களைக் கலைத்துப் போடுகிறது.

10

சனங்கள் அச்சதுப்பு நிலங்களில் உ, ஃ, க், ஙூ எழுத்துக்களின் வடிவில் பதுங்குக் குழிகளைத் தோண்டத் தொடங்கினார்கள். யோகபுரத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உ வடிவில் பாரிய பதுங்குக் குழியொன்றை வெட்டினார்கள். பசியும் குழிதோண்டிய களைப்புமாய் துவண்டு போயிருந்தவர்களைப் பார்த்து யோகபுரத்திலிருந்து அக்கப்பாடுபட்டு எடுத்து வந்த பூசினிக் காய்களில் ஒன்றை அவிப்பதற்கு பார்வதியக்கா சம்மதித்தார். ஏதோவொரு மனிதநேய அமைப்பு சாக்குகளில் பருப்பு, கடலை போன்ற சிறுசிறு தானியங்களை எடுத்து வந்து விநியோகித்தது. இருந்த கொஞ்சம் அரிசியோடு இவை எல்லாவற்றையும் கலந்துபோட்டு பெரு அவியலாகப் பண்ணி எல்லோரும் சாப்பிட்டார்கள்.

பத்து இருபது வருஷங்களாக காணாத உறவுகளையெல்லாம் மாத்தளன் கடற்கரை கண்டுகொள்ள வைத்தது. ஆனாலும், எவர் மனதிலும் மகிழ்ச்சி இல்லை. ஒரு இழவு வீட்டில் பார்த்ததைப் போலவே அச்சந்திப்புகள் மகிழ்ச்சியற்று இருந்தன. உடையார்கட்டிலும் விசுவமடுவிலும் இறந்த மனிதவுடல்கள் தெறித்துக் கிடந்ததைப் பார்த்ததிலிருந்து சின்னம்மாவுக்கு சற்றே மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டது. பிரமை பிடித்தவர்போல் மாத்தளன், புதுமாத்தளன் கடற்கரை பூராவும் பாகேஸ்வரியும் வந்திருப்பாளோவென்று தேடி அலைந்து திரிந்தார்.

உச்சிவெய்யில் அடிக்கையில் மக்கள் துவண்டனர். சூரியன் சற்றே சாய்ந்துவிட்டால் வெட்டிய பங்கருக்குள் போய் இருக்கலாம். மாத்தளன் கடலை அண்மிய சதுப்பு நிலப் பகுதியாதலால் பெருய மரவிருக்ஷங்கள் இருக்கவில்லை; எனினும், இளைஞர்கள் அலம்பல்போல நீண்ட கம்புகளை காடுகளில் வெட்டிக் கொண்டுவந்து சிறு பந்தல்கள் போலப் போட்டு, மேலே தளப்பத்தோலைகளைப் பரவி, மக்களைச் சிறிது வெய்யிலிலிருந்து காபந்து பண்ணினர். இரவுகளில் பல இலாந்தர்களும் கைவிளக்குகளும் இருந்தும் எண்ணை இல்லாததால் பயனற்று இருந்தன. காய்ந்த குச்சிகளைப் பொறுக்கிவந்து குவித்து அங்கங்கு எரித்து வெளிச்சம் உண்டாக்கப்பட்ட இடங்களில் மக்கள் சூழவிருந்து கதைத்தனர்.
அந்தி சாய்ந்து சூரியன் வறுப்பது சற்றே தணிந்து கருணாநிதி, குலசிங்கம், பொன்னம்பலம், செல்வரத்தினம், நவரத்தினம் குடும்பம் அசோக், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீகாந்தன், பவான், மைக்கேல், மரியதாஸன், அரியநாயகம், சாந்தன், செல்லம்மா, பாக்கியமக்கா, சரஸு, குண்டுக்கமலா, காசிநாதன் குடும்பமென்று என்று அவர்கள் பங்கருக்கருகிலிருந்த குடிசையில் ஒன்றாகக்கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்த சமயம் ஒரு மிதியுந்தில் 10 லிட்டர் தண்ணீர் கானுடனும், கைப்பிடியில் கொளுவியிருந்த சாக்குப்பையில் ஐந்து கொத்து அரிசியுடனும் மாதவன் வந்தான். பார்க்க எங்கேயோ குளித்து முழுகிவிட்டு வருபவனைப்போல புத்துணர்ச்சியுடன் இருந்தான்.

எப்பிடிக் கிடைத்ததோ தெரியவில்லை, வாயில் வெத்திலை வேறு போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தான். ஆற்றாமையில் செல்லம்மாக்கா கேட்டா, ‘எங்காலையடாமோனை வெத்திலை?’

‘ஐயோ அது வெத்திலையில்லணை பாக்குவெட்டி மரத்து இலை; வழியிலை பத்தையில கண்டாப்போல உருவிச் சப்பிக்கொண்டுவாறன்.’

‘டில்லிக்குப் போன கருணாநிதியும் கும்பலும் ராஜினாமா எண்ணத்தை கைவிட்டு விட்ட சேதி’யையும் அவர்களுக்குச் சொன்னான்.

இராசையர் சொன்னார்: ‘ கருணாநிதி மட்டுமல்ல, எதிரணியில நின்று எங்கட பிரச்சனையைப் கதைக்கிற அத்தனை பேருக்கும் எம்மீதான அவர்களின் அக்கறை, கரிசினை உண்மையென்றால் உடன எல்லாரும் ராஜினாமா செய்யவேணும்; அப்பதான் மத்திய அரசுக்கு ஒரு அதிர்ச்சியாயிருக்கும். எதிர்க்கட்சியில்லாத மாநில அரசும் ஒரு மோக்கேனந்தான்; எதிர்க்கட்சியில்லை இனிக்காங்கிரஸோட ஓடிப்போய் ஒட்ட என்றுவிட்டுக் கருணாநிதியும் தைரியம் வந்து ஒருவேளை ராஜினாமாப் பண்ணலாம். எல்லாக் கட்சிகளும் இராஜினாமா செய்தால், ஒரு மாநிலத்தின்ரை எதிர்ப்பைச் சம்பாதிக்க விரும்பாத மத்திய அரசு தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டு ஒருவேளை போர் நிறுத்தம் செய்யச் சொல்லி இலங்கை அரசைக் கேட்கலாம். ஆனால், யாரும் செய்வினமோ… இவ்வளவு கதைச்ச ஜெயலலிதா செய்வாவோ?’
‘எங்கட ஆபத்துபாந்தவர்கள் எல்லாரும் செத்துப் போச்சினம் என்று இருப்பம். முந்திக் கொண்டுவந்து போட்ட உணவுப் பொட்டலத்தை மனிதாபிமானம், அகிம்சை என்று பேசுகிற காந்தி தேசக்காரன் இப்ப கொண்டுவந்து போடவேணும். இப்போதான் எங்களுக்கு முன்னைக்காட்டிலும் தேவைகூட. இத்தனை அவலத்தில இல்லாத உதவி இனி வந்தென்ன, விட்டென்ன?’ இதைச் சொல்கையில் தம்பிப்பிள்ளையரின் கண்கள் நீரால் நிறைந்து உதடுகள் துடித்தன.

விவாதங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கவும் அதில்கலவாது ஒரு குச்சியால நிலத்தைக் கீறிக்கொண்டு நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்த மாதவன் சொன்னான்: ‘ நான் இனிப் போகவேணும்.’

‘ எங்கே இனிப்போகப் போறாய் மாதவன்?’ மரியதாஸ் கேட்டான்.

கருணாநிதி இடைமறித்துச் சொன்னான்: ‘ஒரு போராளி எங்கே போறானென்று உங்களுக்குச் சொல்லுவானே… நீங்கள் அப்பிடிக் கேட்கிறதுஞ் சரியில்லை.’

‘எல்லாரும் உங்களுக்குள்ள கடிபடாமா ஒற்றுமையா இருங்கோ. எனக்கொரு வேலை பணிக்கப்பட்டிருக்கு; அந்தக் கடமையை முடிக்கவேணும். இப்ப உங்களுக்குச் சொல்றதுக்கு என்னட்ட இன்னுமொரு சின்னத் தகவல் இருக்கு.’
இப்போது எல்லாரும் அவன் முகத்தைப் பார்த்தனர்.

‘ஆறு மாசத்துக்கு முன்னால எங்கட உயிலங்குளம் மருத்துவ முகாமை ஆமி குண்டடிச்ச போது, சின்னம்மா ஆச்சியின்ர பாகேஸ்வரியக்கா செத்துப்போனா. அது ஆழமான பங்கரொண்டு; அவ கீழ காயப்பட்ட போராளிகளைப் பராமரிச்சுக் கொண்டிருந்தவ. எங்கள்ல எத்தனையோ பேருடைய உயிருகளை மீட்டுத்தந்த அந்த மனுஷியின்ர உயிரை எங்களால காப்பாத்த முடியாமப் போச்சு. சின்னம்மா ஆச்சியைப் பார்க்கிற நேரமெல்லாம் எனக்கு உதறும். மனிஷியின்ரை முகத்தைப்பார்த்து நேராய்ச் சொல்ற பலம் என்னட்ட இல்லை. நீங்கள் யாரும் சமயம் வரும்போது அவ்விட்டை விஷயத்தைச் சொல்லிவிடுங்கோ.’

தன் கண்கள் பனித்திருப்பதை அவர்கள் பாராதிருக்க அரிசியையும் தண்ணீர் கானையும் அவிழ்த்துச் சடுதியில் நிலத்தில் வைத்துவிட்டு மிதியுந்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

அடுத்த நாள் முள்ளிவாய்க்கால், மாத்தளனைச் சுற்றி வளைத்துக்கொண்டு முற்றுகை வெறியில் நின்ற ஆயிரக்கணக்கான இராணுவத்தை இரட்டைவாய்க்கால் – கேப்பாபுலவில் ஊடறுத்து விடுதலைப்புலிகள் தாக்கியதில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மடிந்தனர். (விடுதலைப்புலிகள் இறுதியாகச் செய்த பெரிய தாக்குதல் அதுதான்) இறந்த பல கேணல் தரத்துப் போராளிகளோடு மாதவனும் மடிந்து போனான். தற்கொலைத் தாக்குதலாயிருக்கலாம், உடலம் கிடைக்கவில்லை. செய்தி வந்தபோது அனைவரும் வாய்விட்டு அழுதனர். ‘உனக்கு வாய்க்கரிசி போடவென்றுதான் கொண்டுவந்து தந்தாயோடா மகனே அரிசி?’ சொல்லிச்சொல்லி அவனது தாய் சகோதரங்களும் பாக்கியமக்காவும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக்கொண்டு அழுது அரற்றினர்.

முள்ளிவாய்க்காலை போர் இல்லாத பிரதேசமாக அரசு அறிவித்தது. அங்கு செல்பவர்களுக்கு அரிசியும் பருப்பும் சீனியும் நிவாரணப் பொருட்களாக கொடுக்கிறார்கள் என ஒரு செய்தி பரவவும் பசி தாங்காத சின்னம்மா அங்கே போனார். நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்பட்டது உண்மைதான். நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கும் ஷெல்கள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஷெல் வெடித்தவுடன் மக்கள் நிலத்தில் விழுந்து படுத்தார்கள். சத்தம் எழுப்பாமல் கத்தி போல வந்த சில்லொன்று வரிசையில் காத்துநின்ற ஆறு பேரை சீவிச் சாய்த்தது. சின்னம்மாவுக்கு இடுப்பில் சிறிய வெட்டுத்தான். உடனே சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் உயிர் தப்பியிருந்திருப்பார். கட்டுப்படுத்தப்படாத குருதிப் பெருக்கால் அநியாயத்துக்கு மரணமானார். பல இராணுவத்தினர் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் இராணுவம் மறுநாளும் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியெங்கும் எரிகுண்டுகளையும் ஷெல்களையும் வீசவும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே நாள்முழுவதும் இருக்க வேண்டியதாயிற்று.

‘சனம் சிலது இன்னும் முள்ளிவாய்க்கால் பக்கம்தானாம் போகுது.’

‘ஏனாம் ஆமிக்காரன் தோட்டாச் செலவில்லாமல் கொல்லட்டுமென்டோ?’

கருணாநிதியின் மூன்று வயது மகள் ஆதர்ஸாவுக்கு நடப்பது எல்லாமே குழப்பமாக இருந்தது.

‘ஏனம்மா எல்லாரும் குழிக்குள்ள இருக்கிறம்?’
‘ஆமிக்காரன் ஷெல் அடிக்கிறாண்டா?’
‘என்னத்துக்கு அடிக்கினமாம்?’
‘ அதுதான் குஞ்சு தெரியேல்லை.’

‘டாம்’, ‘டும் டும் டும்’ என மீண்டும் வெடிச் சத்தங்கள் எழுந்து பீதியைக் கிளப்பின. ஒவ்வொரு பீரங்கி வெடியும் கடலிலும் எதிரொலித்தது.

‘மல்டிபறல்தான் குத்திறான் போல கிடக்கு’ என்றான் பொன்னம்பலம்.
‘அம்மா எனக்கு நெடூவலும் இருக்கக் கால் உளையுது; நான் வெளியில போகப் போறன்.’
‘இல்லையடா இப்போ வெளிய போகக்கூடாது; போனா அங்கே குண்டு வெடிச்சிடும்.’
‘ அப்ப அவங்களைக் கெதியாய் போடச் சொல்லுங்கோவன், வெடிச்சாப்போல நான் வெளிய போக.’

எல்லோருக்கும் அந்த வேளையிலும் சிரிப்புத்தான் வந்தது. சின்னத்தம்பிக் கிழவன் இன்னொரு தரம் சுனாமி வந்து அழிச்ச கதையை விஸ்தாரம் பண்ணி நினைவு கூர்ந்துவிட்டு, ‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவனையும்’ சபித்து ஓய கருணாநிதியும் மரியதாஸும் சாத்திரியாரின் வாயைக் கிளற ஆரம்பித்தனர்.

11

பகலில் சேகரித்த காய்ந்த சுள்ளிகளை ஒரு தகட்டில் அடுக்கி எரித்ததில் பதுங்குக் குழிக்குள் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்தது. நவரத்தினமும் செல்வரத்தினமும் அது அணையாமல் தொடர்ந்து எரிவதற்கேற்ற வகையில் குச்சிகளை வாகாக அடுக்கிச் சரிசெய்து கொண்டிருந்தனர்.

‘சாத்திரியார்… இப்போ பூமியை பிரபஞ்சத்திலுள்ள மற்ற கோள்கள் பாதிக்குது. ஒன்று இழுக்குது; மற்றது தள்ளுது; இன்னொன்று குடையுது, சொறியுது. அதனாலதான் இங்கே சுனாமி, பூகம்பம், வெள்ளப்பெருக்கு, வரட்சியெல்லாம் வருகுதென்றால் அதுக்கும் எங்கட ஞானவிலாசத்துகுள்ள பிடிபடாத ஒரு அறிவியல் விளக்கம் இருக்குமென்றுவிட்டுக் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அவனவன் வெவ்வேறு நேரத்தில பிறந்திட்டான் என்பதற்காக ஒரு கிரகம் பொன்னியின்ரைக்கு பிள்ளைக்கு செல்வத்தையும் சுகபோகத்தையும் ஆரோக்கியத்தையும் குதூகலத்தையும் தந்து, சின்னியின்ரை பிள்ளைக்கு ரோகத்தையும் தரித்திரதையும் உலைச்சலையும் வலியையும் கலியையும் கொடுக்குமென்றதை என்னுடைய மனது ஒத்துக்கொள்ளுதில்லை. உதுகள் எல்லாத்தையும் வுடுங்கோ, இப்பிடி யோசிப்போமே… இப்போ வீடு வாசலைத் துறந்து ஒதுங்க ஒரு கூரையில்லாமல் தெருவில நிண்டு மாயிறசனம் இத்தனை லக்ஷம் பேரையும் பன்னிரண்டு ராசிகளின் தொகையாலதான் வகுத்துப் பார்த்தாலும்… தைரிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக ஸ்தானத்தில் செவ்வாயும் பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் பூர்வபுண்ணியத்தை வழங்கியபடி காரியும் திவ்ய ஒளியை இறைக்கிற சூரியனும் லாபஸ்தானத்தில் குருவும் ஞனோஸ்தானத்தில் புதனும் உச்சம் பெற்ற ஜீவன ஸ்தானத்தில் கேதுவுமாய் நின்று உச்சகட்டப் பலன் தந்துகொண்டு இருக்கிற ஜாதகர்கள் குறைஞ்சது ஒரு பத்தாயிரம் பேர் இருப்பினமோ, இல்லையோ?’

மரியதாஸ் ஏதோ அவரைக் கிண்டல் பண்ணுவதற்கு , ‘சாத்திரி’ என்றுவிட்டு இரண்டு ஆவர்த்தனம் இடைவெளிவிட்டு ஓசைலயத்துடன் ‘யார்’ என்றான்.

சாத்திரியார் அவனைக் ‘கொஞ்சம் பொறு’ என்பதாகக் கைகாட்டிவிட்டுத் தான் எதையோ சொல்வதற்குக் கண்களை மூடிக்கொண்டு பீடிகையாக, ‘தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப் / பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர்பா லுடையன் / ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த நாடுடையன் / நம்பெருமான்’ என்னுகையில், இராணுவத்தின் திசையிலிருந்து வெறியோடு வந்த புல்டோஸர் பதுங்குகுழி அருகிருந்த மண்மேட்டைத் தன் பாரிய அலகால் ஒரே உந்தலில் தள்ளிக்கொண்டு, அவர்கள் பதுங்குகுழியை மூடி நிரவி விட்டு, அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடியது.

 

உடலழகன் போட்டி – அ.முத்துலிங்கம் March 28, 2010

உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.

 ஒக்டோபர் மாதத்து கடைசியில் கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைப்பார்கள். அது என் மனைவியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எப்பொழுது நேரம் சொன்னாலும் புதிய நேரத்தையும் பழைய நேரத்தையும் சேர்த்தே சொல்வார். கடந்தவாரம்தான் நேரத்தை மாற்றியிருந்தார்கள். ஆனால் மனைவி ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நேரத்தை இப்படித்தான் சொல்வார். ‘இப்பொழுது 7 மணி, பழைய நேரம் 8 மணி.’

 நாங்கள் இவ்வளவு தூரம் பயணம்செய்து போட்டியை பார்க்க தீர்மானித்ததற்கு காரணம் ஓர் ஈழத்துக்காரர் இம்முறை போட்டியில் கலந்து கொள்கிறார் என்பதுதான். அவருக்கு வயது 35. உடலழகன் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு கிடையாது. எல்லோரையும்போல தானும் தன்பாடுமாக அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்துக்கு போய் வந்தார். அங்கே ஒருநாள் கோயிலுக்கு நேர்ந்ததுபோல கட்டுக்கோப்பாக உடம்பை வளர்த்திருந்த ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தார். அவர் ‘ஆசியாக்காரர்களுக்கு சும்மா உடற்பயிற்சி நிலையத்துக்கு வந்து போக மட்டுமே தெரியும். ஒரு போட்டிகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டார். அப்படி அவர் ஏளனமாகப் பேசியது ஈழத்துக்காரருக்கு மனதை உறுத்தி, எப்படியும் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.

 ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ் என்பவரை பயிற்சிக்காக ஈழத்துக்காரர் அணுகினார். அவர் இவருடைய குச்சிபோன்ற உடம்பை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டார். இவர் விடவில்லை, தொடர்ந்து தனக்கு தெரிந்த மாதிரி பயிற்சிகள் செய்துவந்தார். ஒரு வருடம் கழித்து எட்வேர்ட்ஸை அணுகியபோது மறுபடியும் மறுத்தார். இவருடைய விடா முயற்சியை தொடர்ந்து கவனித்த சாம்பியன் கடைசியில் ஒருநாள் தானாகவே பயிற்சி தருவதற்கு சம்மதித்தார். ஆனால் சில நிபந்தனைகள் இருந்தன. பயிற்சிக்காலம் முழுவதும் மாச்சத்து உணவு கிடையாது. உப்பு, சர்க்கரை இல்லை. போட்டிக்கு முன்னர் 36 மணிநேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. உடற்பயிற்சிக்காரர்களுக்காக  விசேடமாகத் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

 ஐந்து வருடமாக தொடர்ந்து பயிற்சி எடுத்து போட்டியில் பங்குபற்றுகிறார். அதை பார்க்கத்தான் நானும் மனைவியும் ஒரு நண்பருமாக ஒட்டாவா புறப்பட்டிருந்தோம். உடல் அழகன் போட்டி நடக்கும் அரங்கத்துக்கு போய்ச் சேர்ந்தபோது ஒரு புது இடத்துக்கு வந்துவிட்டதுபோல இருந்தது. அந்த வகையான கூட்டத்தை நான் முன்னர் கனடாவில் கண்டது கிடையாது. ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்களாக தோற்றமளித்தார்கள். ஆறடி உயரமாக வலுவான தேகத்தில், உடம்போடு ஒட்டிப்பிடிக்கும் டீசேர்ட் அணிந்து புஜங்கள் உருளும் உடம்போடு ஆண்கள் காணப்பட்டார்கள். வந்திருந்த பெண்களில் வயது முதிர்ந்த பெண்கள் அபூர்வம். அநேகமானவர்கள் தசைநார்கள் திரண்டு இளமையாக காணப்பட்ட பெண்கள். எங்கள் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்கும் ஒரு தகவல் அப்போது கிடைத்தது. உடல் அழகன் போட்டியுடன் உடல் அழகிப் போட்டியும் அதே மேடையில் நடைபெறுமாம்.

 டிக்கட் கொடுக்கும் இடத்தில் நிரையாக நின்றார்கள். நான் ஏற்கனவே தொலைபேசியில் என் பெயரை முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு முன்னால் ஒருத்தர் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு டிக்கட் கொடுக்கும் பெண்மணியிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடைய கைகள் திரண்டு ஒரு குழந்தையின் தொடைகள்போல வெளியே தள்ளிக்கொண்டு நின்றன. அவருடைய பின்பக்க காட்சியை பார்த்துக்கொண்டு வரிசை வெகுநேரம் நின்ற பிறகு டிக்கட் பெண் என்னிடம் திரும்பினார். நான் பெயரைச் சொன்னேன். கனடா வந்து இத்தனை வருடங்களாகியும் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்துகொண்டு டிக்கட்டுகளை தந்தது இதுவே முதல் தடவை.

 அரங்கம் நிறைந்திருந்தது. பன்னிரண்டு நடுவர்கள் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். முதலில் பெண்கள் போட்டி. அறிவிப்பாளர் பெயரைச் சொல்ல பெண்கள் நடந்து வந்து மேடையின் நடுவில்  தங்கள் அங்கங்களை பரிசீலனைக்காக நிறுத்தினார்கள். இரண்டு முக்கோணங்கள் தொடுத்த  மார்புக்கச்சும், ஒரு முக்கோண இடைக்கச்சும் அணிந்திருந்ததால் அவர்களுடைய எல்லா அங்கங்களும் துலக்கமாகத் தெரிந்தன. இந்தப் பெண்களின் கைகளும் கால்களும் மெலிந்து தசைநார்கள் இறுகிக் கிடந்தன. விலா எலும்புகள் அத்தனையும் தள்ளிக்கொண்டு நின்றதில் கொழுப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உடம்பில் எந்த பகுதியிலும் வரிகளோ சுருக்கங்களோ இல்லாமல் வயிறு மடிப்பு மடிப்பாக இறுகி சிலேட் பலகைபோல தட்டையாக காட்சியளித்தது.  நடுவர்கள் இடது தொடை, வலது புஜம், வயிறு, முதுகு என்று அங்கங்களைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தந்த அங்கங்களின் திரட்சியையும், தசை மடிப்பையும் காட்டினார்கள்.

 அதில் ஒரு பெண்ணை மறக்கமுடியாது. உயரமாக தங்கமுடி புரள குதிரைபோல டக்டக்கென்று நடந்துவந்தாள். அவளைப் பார்த்ததும் அவளுடைய தசைநார்களுக்கும் எலும்புகளுக்குமிடையில் பெரும் சண்டை நடைபெறுவது தெரிந்தது. போட்டி தொடங்க முன்னரே என்னிடமிருந்த அத்தனை புள்ளிகளையும் அந்தப் பெண்ணுக்கே வழங்கினேன். நடுவர்கள் முதுகு என்றார்கள். அவள் இடதுகையால் முதுகில் வழிந்து கிடந்த பொன்முடியை தூக்கி நிறுத்திக்கொண்டு தன் வலது பக்க முதுகு தசைகளை மட்டும் இறுக்கிக் காட்டினாள். பிறகு டக்கென்று ஒரு சத்தம் கேட்டது. இடது பக்க தசைநார்களை மட்டும் இறுக்கிக் காட்டினாள். இன்னொரு டக் சத்தம். இரண்டு காந்தங்கள் ஒட்டிக்கொள்வதுபோல இரண்டு பக்க முதுகும் ஒட்டிக்கொண்டது. சபையினரின் கைதட்டல் எழுந்தது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அவளுக்கே முதலிடம் கிடைத்தது.

 ஆண்கள் போட்டிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் படித்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். போட்டியில் பங்குபற்றும் ஈழத்துக்காரர் அனுப்பியிருந்தார். ‘அவசர உதவி தேவை.  மேடைக்கு வரவும்.’ அவர் முதல் நாளே வந்துவிட்டார். போட்டியாளர்கள் எல்லோரும் பொய் கண்டுபிடிக்கும் கருவி சோதனையில் பாஸாக வேண்டும். அதில் தோல்வியுற்றால் அவர்களுடைய ரத்தத்தில் போதைப்பொருள் சேர்ந்துள்ளதா என்பதை பரிசீலித்துப் பார்ப்பார்கள். ஏதோ பிரச்சினையென்று  நெஞ்சில் பயம் ஏறியது. என்னுடன் பயணித்த நண்பர் இளவயதுக்காரர்;  உயரமாய் வாட்டசாட்டமாய்  இருப்பார். அவரை மேடைக்குப்போய் பார்த்துவர அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் சிரித்துக்கொண்டே திரும்பினார். போட்டியாளர்கள் முழு உடம்பையும் மழித்து, ஒருவித கறுப்பு எண்ணெயை பூசி போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த எண்ணெய் தேய்த்துவிட வேண்டியவர் வரவில்லை. எண்ணெய் பூசினால்தான் தசைநார் மடிப்புகள் மேடை ஒளியில் துல்லியமாகத் தெரியும். நண்பர் அந்த வேலையைத்தான் தனக்கு தெரிந்த அளவுக்கு செய்துமுடித்துவிட்டு திரும்பியிருந்தார்.

 எனக்குப் பக்கத்தில் பயில்வான்போல தோற்றமுள்ள ஒருவர் உட்கார்ந்து பெண் போட்டியாளர்களை உரக்கக் கூவி அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுமல்லாமல் ‘இன்னும் கொஞ்சம் நடுவுக்கு நகர், பின் பக்கத்தைக் காட்டு, காலை முன்னுக்கு மடி, புஜங்களை மேடையை நோக்கி திருப்பு’ என்று கத்திக்கொண்டே இருந்தார்.  இவர் ஒரு பிரபல பயிற்சியாளர் என்பதை நான் பின்னால் அறிந்துகொண்டேன். காந்தத்தைப்போல முதுகை ஒட்டவைத்த பெண், போட்டி முடிந்த பின்னர் சபையினுள் நுழைந்தார். அவர் போட்டிக்கு தரித்த முக்கோண உடைக்கு மேலே முன்பக்கம் பூட்டாத மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார். பயிற்சியாளரை நெருங்கியதும் அவர் அந்தப் பெண்ணின் இரண்டு கொலரையும் பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். பின்னர் அதைத் தொடர்வதற்காகவோ என்னவோ இருவரும் அவசரமாக வெளியேறினார்கள்.

 ஆண்களுக்கான போட்டி தொடங்கியபோது அது முற்றிலும் வேறு விதமான காட்சியாக அமைந்தது. அவர்கள் மல்லர்கள் நடந்துவருவதுபோல கால்களை அகலமாக வைத்து மேடையில் தோன்றினார்கள். அவர்களுடைய தொடைகள் பலாக்காய்கள் காய்த்ததுபோல தொங்கின. புஜங்கள் தனித்தனியாக உயிர் பெற்றது போல சும்மா நடக்கும்போதே திரண்டு திரண்டு உருண்டன. கைகளை மடக்குவதும், கால்களை சுழட்டுவதும், வயிற்று தசைகளை ஓடவிடுவதும், முதுகை புத்தகத்தை திறப்பதுபோல அகலிப்பதுமாக பலவிதமான வித்தைகளை ஒவ்வொருவரும் சளைக்காமல் செய்து காட்டினார்கள்.

 நடுவர்கள் இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்கள் அல்ல. அவர்கள் தசைநார்களின் பருமனையோ அவை உருளும் லாவகத்தையோ கணக்கில் எடுப்பவர்களாகத் தெரியவில்லை. ஒரு உடம்பில் தசைநார்கள் சரியான விகிதத்தில் விருத்தியாகி இருக்கின்றனவா என்பதை கவனித்தார்கள். 5′ 5″ உயரமான ஓர் ஆணின் எடை 160 றாத்தலாக இருக்கவேண்டும். அதற்குமேலான ஒவ்வொரு அங்குல உயரத்துக்கும் எடை 5 றாத்தல் கூடவேண்டுமென்பது விதி. தசைநார்கள் உடம்பு முழுக்க சீராக விருத்தியடைந்திருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். சிலருக்கு கைகள் வளர்ச்சியடைந்திருக்கும் ஆனால் அதே அளவுக்கு முதுகு தசைகள் வளர்ச்சியடைந்திருக்காது. மனித உடம்பில் 640 தசைநார் முறுக்குகள் இடது பக்கம் 320, வலது பக்கம் 320 என்று இருக்கும். இதிலே ஆகக்கூடிய தசைநார்களை சீராகவும் முழுமையாகவும் பெருக்கியிருக்கிறார்களா என்பதைத்தான் நடுவர்கள் பரிசீலிப்பார்கள். அத்துடன் அவற்றை ஒருவர் கவர்ச்சியாக வெளிப்படுத்தும் திறமை பெற்றவராயும் இருத்தல் அவசியம்.

 போட்டியில் பங்குபற்றிய அத்தனைபேரும் வெள்ளைக்காரர்கள். இரண்டே இரண்டு கறுப்பு இனத்தவர். ஒரேயொரு தமிழர். போட்டியாளர் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றும்போது பெரும் கூச்சல் எழும். அவருடைய பயிற்சியாளர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும். ஈழத்துக்காரர் மேடையை நோக்கி கணுக்கால் வெள்ளத்தில் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்தபோது மூன்றே மூன்று குரல்கள் எழும்பின. அது எங்களுடையதுதான். நடுவர்கள் உத்திரவுப்படி அவர் மேடையில் சுழன்று சுழன்று தேகத்தில் ஐந்து வருடங்களாக பாடுபட்டு வளர்த்துப் பழக்கிய தசை மடிப்புகளையும், திரட்சிகளையும் பல நிலைகளில் பல கோணங்களில் காட்டினார். கறுப்பு எண்ணெயில், மேடையில் பிரகாசித்த குவிய விளக்குகளின் ஒளியில், நண்பரின் தசைக் கட்டங்கள் எல்லாம் நல்லாய் கூராக்கிய கத்திபோல பளிச்சுப் பளிச்சென்று ஒளிவிட்டன. ஆறுதசைக் கட்டம், எட்டு தசைக்கட்டம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே மேடையில்  அவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றின. தேசிய விருதுபெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றதாலோ என்னவோ ஈழத்துக்காரரின் அசைவுகள் கச்சிதமாக மேடையில் வெளிப்பட்டன. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் மனித உடலில் சாத்தியமா என்று வியக்கத் தோன்றியது. நடுவர்கள் நெஞ்சை அகலிக்கச் சொன்னார்கள். இவர் நெஞ்சை விரித்ததும் ஒரு வண்ணத்துப்பூச்சி இரண்டு செட்டைகளையும் விரித்ததுபோல அவருடைய மார்பு இரண்டு மடங்காகப் பெருகியது. சபையினர் ஒருகணம் பிரமித்துப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது.

 தன்னுடைய முறைக்காக இவர் மேடைக்கு வெளியே காத்திருந்தபோது மற்ற போட்டியாளர்கள் இவரை துச்சமாக மதித்தனர்; மனரீதியாக கலைக்க முயன்றனர். ஒருவர் இவர் புஜத்தின் பருமனை ஆராய்ந்துவிட்டு அது இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்றார். இன்னொருவர் கண்ணாடியின் முன் நின்று தன் கைகளை மடக்குவதும், நெஞ்சை அகலிப்பதும், கால்களை பக்கவாட்டில் சுழட்டுவதுமாக தன் பிம்பத்தில் தானே மயங்குவதுபோல நின்றார். எல்லாம் இவரை பயங்காட்டும் முயற்சிதான். நண்பர் ஒன்றையும் சட்டை செய்யாமல் தன் முறைக்காக காத்திருந்தார். இவையெல்லாம் அவர் பின்னால் சொல்லி தெரிந்துகொண்டது.

 முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று தொடங்கியபோது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் மேடையில் ஒரு நிமிடம் அளிக்கப்பட்டது. அவர் தேர்வுசெய்த ஒரு பாடலுக்கு, நடன அசைவுகள் மூலம் தன் அங்கத்திலுள்ள அத்தனை தசைநார்களையும் இசைக்கேற்ப முறுக்கிக் காட்டவேண்டும். இரண்டாவது சுற்றில் ஈழத்துக்காரருக்கு நிறையக் கைதட்டல் கிடைத்தது. நடுவர்கள் முடிவை அறிவித்தார்கள். கிழக்கு ஒன்ராறியோ உடலழகன் போட்டியில் ஈழத்துக்காரர் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்திருந்தார்.

 வெற்றிபெற்ற மூன்று பேரும் மேடையில் நின்று படம் பிடித்துக்கொண்டபோது  அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்ததை அவதானித்தேன். பின்னால் அது என்னவென்று ஈழத்துக்காரரை விசாரித்தபோது பக்கத்தில் நின்றவர் தனக்கு மயக்கமாகி வருகிறதென்றும் தான் விழுந்தால் தன்னை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். அதற்கு ஈழத்துக்காரர் என்ன பதிலிறுத்தார் என்று கேட்டேன். ‘எனக்கும் மயக்கம் வருகிறது. நான் விழுந்தால் நீங்கள் பிடியுங்கள்’ என்று தான் அவரிடம் சொன்னதாகக் கூறினார். இந்த மேடைகளில் மயங்கி விழுவது பலமுறை நடந்திருக்கிறது. சராசரி மனித உடம்பில் கொழுப்பு 20 வீதம் இருக்கும். உடலழகன் போட்டியாளர்கள் கொழுப்பு சத்தை நாலு வீதத்துக்கு குறைத்துவிடுவார்கள். சத்து வீதம் அதற்கு கீழே போனால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

 போட்டி முடிந்த பின்னர் ஈழத்துக்காரரை மேடைக்கு பின்னால் சென்று சந்தித்தோம். உடைமாற்றி மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அரை மணித்தியாலத்திற்கு முன்னர் திரும்பியும் பாராதவர்கள் இப்பொழுது அவரை சூழ்ந்து வாழ்த்தினார்கள். நான் அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை காட்டினேன். ஓர் இரும்புச் சிலையை கட்டிக்கொண்டதுபோல இருந்தது. ஒருவருக்குச் சொல்லவேண்டிய ஆகச் சிறந்த வாழ்த்து புறநானூறில் வருகிறது. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ அதற்கு முற்றிலும் தகுதியானவராக அவர் அப்போது எனக்கு தோன்றினார்.

 வெற்றியை கொண்டாட உணவகத்துக்கு போகலாம் என்று தீர்மானித்தோம். யானை போன வழி பாதை என்பார்கள். உணவகத்தை நோக்கி அவர் நடந்தார். அங்கே உண்டான பாதையில் நாங்கள் பின்னால் சென்றோம். கடந்த 18 மாத காலமாக அவர் பயிற்சியாளர் வகுத்த உணவுப் பட்டியல் பிரகாரம் உணவருந்தினார். உப்புச் சேர்க்காத, சர்க்கரை கலக்காத, ஊட்டச்சத்து நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உணவு. கடந்த 36 மணிநேரமாக அவர் சொட்டு நீர் பருகவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்றுதான் முதன்முறையாக அவர் சாதாரண உணவை உட்கொண்டார். உணவுத் தட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரவர அவர் உணவை ருசித்து ருசித்து சாப்பிட்ட காட்சி மறக்கமுடியாதது.

 எங்களைச் சுற்றி அந்த உணவகத்தில் போட்டியாளர்களும் நடுவர்களும் வென்றவர்களும் தோற்றவர்களும் இரண்டு கைகளாலும் நிறுத்தாமல் சத்தமெழுப்பியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரிசாரகி சன்னமான உடை தரித்து, மீன் வலை காலுறையில் பெரிய பெரிய உணவு தட்டங்களை குடைபோல தலைக்குமேல் தூக்கியபடி விரைந்தாள். குருவிக்கூட்டிலிருந்து தலை நீட்டும் குஞ்சுபோல அவள் வெண்கழுத்து பின்னே நீண்டு சாய்ந்திருந்தது. அமெரிக்க கொடி வரைந்த ரீசேர்ட் அணிந்த ஒருத்தர் மேசையை தட்டி பல உணவுகளுக்கு ஆணை கொடுத்தார். பயில்வான்களும் அவர்கள் காதலிகளுமாக உணவகம் நிரம்பியிருந்தது. அடிக்கடி இரண்டு பாம்புகள் முத்தமிடுவதுபோல முன்னால் வளைந்து முத்தமிட்டுக்கொண்டார்கள். அடுத்த நாள் விடியாமல் போகக்கூடும் என்பதுபோல அவசரமாக அத்தனை தட்டங்களையும் அந்தக் கூட்டம் தின்று தீர்த்தது.

 ‘உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கேட்டேன். அவர் பதில் கூறாமல் நீண்டநேரம் யோசித்தார். முகத்தில் தாடை எலும்புகள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என்பது துலக்கமாகத் தெரிந்தது. முள் சரியான இடத்துக்கு வந்ததும் ரேடியோ பாடுவதுபோல அவர் பதில் சொல்லத் தொடங்கினார். திடீரென்று பேசினாலும் ஏற்கனவே சிந்தித்ததையே சொன்னார் என்று நினைக்கிறேன். ‘எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது’ என்றார்.

 ‘போட்டி மனநிறைவை தந்ததா?’ என்றேன். அவர் ‘இது ஒரு மோசமான போட்டி. டென்னிஸ் போலவோ, கொல்ஃப் போலவோ இன்னொருவருடன் சேர்ந்து ஆடும் ஆட்டம் அல்ல.  3-4 மணிநேரம் தினமும் உடற்பயிற்சி செய்து தயாரிக்கவேண்டும். அந்த நேரத்தை என் குடும்பதினரிடம் இருந்துதான் நான் திருடினேன். கட்டுப்பாடான உணவுப் பழக்கம்; மிக மிகத் தனிமையான உழைப்பு. பல நேரங்களில் உங்கள் மீதும், உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்படும். உடலை வருத்திப் பிழிந்து கிடைத்த வெற்றிதான் இது’ என்றார்.

 எனக்கு பேராசிரியர் ரோபர்ட் கேர்ன்ஸ் நினைவுக்கு வந்தார். அவர் கண்டுபிடித்த கார் கண்ணாடி துடைப்பானை ஃபோர்ட் கார் கம்பனி திருடிவிடுகிறது. பேராசிரியர்,  ஃபோர்ட் கம்பனிமீது வழக்கு தொடுத்து 12 வருடங்களாக நீதிக்காக போராடுகிறார். அவருக்கு வேலை பறிபோகிறது; மனைவி பிள்ளைகள் அவரை விட்டு விலகுகிறார்கள். நண்பர்கள் உதாசீனம் செய்கிறார்கள். அப்படியும் விடாமல் தனித்து நின்று போராடி பேராசிரியர் வெல்கிறார். ‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

 நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். பனிக்காலம் தொடங்கிவிட்டாலும் சில மரங்கள் தங்கள் கடைசி இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும். கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை. நடைமுறையில் இருக்கும் உச்சபட்ச வேக விதிகளை புறக்கணித்து எங்கள் கார் இடையில் ஓர் இடமும் நிற்காமல் ஓடியது. நாங்கள்  ரொறொன்ரோ வந்து சேர்ந்தபோது இரவு நேரம் 11.00 மணி. பழைய நேரம் 12.00 மணி.

 

டி.கண்ணன் – கவிதை

Filed under: காலம் இதழ் 34 — kaalammagazine @ 2:50 am

காட்சி

உச்சாணிக்கிளைக்குக் கீழ்க்கிளை
அமர்ந்த பறவை
‘தெரியும்’ ‘தெரியும்’
என்று அலறியது
வான் நோக்கி.
அணில்கள் தாவி மறைந்தன
‘அப்படியா’ எனக் கேட்டு
பறந்தமர்ந்தன அருகாமைப்
பறவைகள்
‘தெரிந்தால்தான் என்ன?’
என உச்சாணிக்கிளைப்
பறவையின் உச்சாடனம்.
மரம் முழுவதும் கிளைகள்
கிளைகள்தோறும் பறவைகள்.
‘தெரியுமே’ என்றது
கானகம்.

 

சின்னத் தம்பி – செழியன்

Filed under: காலம் இதழ் 34 — kaalammagazine @ 2:47 am
Tags:

 எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக  பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். ஆனால், நாவலப்பிட்டி கதிரேசன் குமாரா மகா வித்தியாலயத்தில் பிட்டத்தில் ஆறு அடி வாங்கி சாதனை படைத்தது என்னைத் தவிர இன்று வரை வேறு யாருமாக இருக்கமுடியாது.

மாணவர்களைத் திருத்துவதற்காக ‘பிட்டத்தில் பிரம்பால் ஆசிரியர்கள் அடிப்பதுண்டு’ என்பது உண்மைதான். அடிவாங்கிய மாணவன் துடிதுடித்துப் போனதாகவும் துவண்டு விழுந்ததாகவும் பலவிதமான கேள்விக் கதைகள் உள்ளன. அந்த பிரம்படியின் தழும்புகள் இன்றுவரை சிலரது பிட்டத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இந்த வீரக்கதைகளை தமது மனைவியிடம் கூறி ‘மாவீரன்’ என்ற பெயரை இரகசியமாகப் பெற்றுக்கொண்ட வீரர்களும் உள்ளதாகக் கதைகள் உலாவுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் பள்ளிக்கூடங்களில் நடந்த இவை, மனித உரிமை மீறல் என்பதால் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நமது ஐ.நாடுகள் சபை விருப்பப்படலாம். வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் தானே. ஆனால், நிச்சயமாக நமது அரசு  தமது மக்களின் பிட்டத்தை ஆராய்வதற்கு ஐ.நா.வை அனுமதிக்கத் தயாராக இருக்காது என்று நாம் நம்பலாம். அதனிலும், பார்க்க ‘போராடி மடிந்து போகலாம்’ என்று அந்த சகோதரர்கள் நினைக்கலாம். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு கையாலாகாத அமைப்பு என்றோ, களங்கப்பட்ட அமைப்பு என்றோ வாய்க்கு வந்த படி உடனே நாம் சொல்லி விட முடியாது.
 பெரும்பான்மையான நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் பெண்களையோ, ஆண்களையோ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது சரியா, பிழையா? என்று ஐ.நா. தீர்மானிக்கும் வரை அது ஒரு ‘ஐனநாயக அமைப்பு’ என்றும், பூமிப் பந்தையும் அதில் வாழும் மனிதர்களையும் காப்பாற்றும் ஒரு காவல் தெய்வம் என்றும் நிச்சயமாக இல்லாவிட்டாலும், ஓரளுவுக்கேனும் நம்பலாம்.
 அந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அருளம்பலம், ராஐன் செல்வநாயகம், தியாகராஐட, மந்திரி குமார சூரியர், மேயர் துரைப்பாவைப் பற்றியெல்லாம் எனது கையெழுத்து சஞ்சிகையில் அவமரியாதையாக எழுதினேன் என்பது என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. கையெழுத்துச் சஞ்சிகையை கைப்பற்றி வகுப்பாசிரியை மூலமாக அதிபரின் அறைக்கு என்னை விசாரணைக்காக அனுப்பிவைத்த கைங்கரியத்தை செய்தவன் இராமச்சந்திரன் என்ற மாணவன்.
 மதிய இடைவேளையின் போது என்னை அதிபர் விசாரணைக்காக அழைத்தார். உப அதிபர் முன்னிலையில் சஞ்சிகையை புரட்டிப் பார்த்துவிட்டு, ‘மந்திரிமாரைப் பற்றியெல்லாம் கூட இப்படி எழுதி இருக்கின்றான்’ என்று ஆச்சரியமாகக் கூறியவர், என்ன நினைத்தாரோ சில நிமிடங்களில் விடுதலை செய்தார். எனது அப்பாவின் முகம் சமயத்தில் அவருக்கு வந்திருக்கலாம் என்றும் எனக்கு ஒரு நினைப்பு.

இதை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்ல, வகுப்பாசிரியை பிரகாஸ்பதிக்கும் தாங்கமுடியவில்லை. அதிபரிடம் மீண்டும் சென்றார்கள். என்ன பேசினார்கள் என்பது மட்டும் ஒரே மர்மம். இடைவேளை முடிந்ததும் அதிபர் தனது நீளமான பிரம்புடன் வந்தார். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போன்று, இந்தப் பிரம்பு தன்னுடனேயே பிறந்தது என்ற பெரு நினைப்பு அவருக்கு.  கூட  வகுப்பாசிரியை பிரகாஸ்பதியும் வந்தார்.

‘கட்டுரைகள் எழுதியது யார்?’, ‘ஓவியங்கள் வரைந்தது யார்?’, ‘கவிதைகள் எழுதியது யார்’, ‘யாருடைய கையெழுத்தில் சஞ்சிகை உள்ளது?’ என்று பலவகையான கேள்விகள் அதிபர் கேட்டார். எனக்குப் பதில் சொல்வதில் எந்தக் கஸ்டமும் இருக்கவில்லை. ஏன் என்றால், எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்.

‘நான் தான் செய்தேன், வேறு வேறு பெயர்களில்’ என்ற எனது பதிலால் சஞ்சிகையில் ஓவியம் வரைந்தவர், கவிதை எழுதியவர், சிறுகதை எழுதியவர் என்று எல்லாரும் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் எனக்கு பிரம்படி என்று அதிபர் தீர்மானித்தார். அது விசாரணைக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட முடிவு என்பதுதான் உண்மை.

அதிபர் ராஐகோபால் அந்தக் காரியத்தை செய்ய முன்னர் சுவரைப் பார்க்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார். அது ஏனைய மாணவர்கள் எனது பிட்டத்தை பார்ப்பதற்கு வசதியாகவா? அல்லது பிரம்பால் அடிக்கும் போது எனது முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாததாலா? என்று தெரியாது. ஆறு அடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் துளி கூட வரவில்லை.  ஆனால், அதற்குப் பிறகு அந்தக் கல்லூரியில் என் மனம் துளியளவும் ஒட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் சென்று படிக்கும் திட்டம் ஏற்கெனவே இருந்தது. அதன் படி அடுத்த ஆண்டு மீண்டும் எட்டாம் வகுப்பில் உரும்பராய் இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.

ஒரு நாள் காலை கல்லூரிக்கு செல்லும் வழியில், ‘ இன்று துக்க தினம். பாடசாலையை பகிஸ்கரியுங்கள்’ என்று வீதியில் நின்ற சில இளைஞர்கள், மாணவ மாணவிகளை வழிமறித்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது முன் எப்போதும் பார்க்காத ஒரு புதினமாக எனக்கிருந்தது. கல்லூரி  வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பில் இருந்த சில மாணவர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். என்ன விசயம் என்று மெல்லக் கேட்டேன். ‘திரவியம் செத்துப்போட்டான்’ என்று கலக்கத்துடன் கூறினார்கள். எல்லாருடைய முகத்திலும் யாரோ நெருங்கிய உறவினரை இழந்த துக்கம் வழிந்தது. கோப்பாய் வங்கியை கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் வழியில், பொலிசார் துரத்திச் சென்று கைது செய்ததால் சயனைட் அருந்தி திரவியம் இறந்து போனதாக ஒருவன் சொன்னார்.

‘யார் இந்தத் திரவியம்?’ என்று எனக்கு மனது குடைந்தாலும், கேட்க வெட்கமாக இருந்தது.
 ‘துவக்கு வாங்கத்தான் திரவியத்துக் காசு தேவைப்பட்டது’ என்று இன்னொருவர் சொன்னான்.
 ‘அவனோட போன ஆட்கள் எல்லாம் தப்பிவிட்டினம். திரவியம் மட்டும்தான் பிடிபட்டுப் போனான்’ என்று இன்னொருவன் சொல்ல, ‘நீர்வேலிச் சனங்கள் தான் திரவியத்தை யார் என்று தெரியாமல் பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்திட்டுதுகள்’ என்று எவனோ ஆவேசப்பட்டான்.
 யார் இது? எதற்காக மாணவர்கள் கலங்குகின்றனர். ஆசிரியர்கள் தமது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இளைஞர்கள் வீதியில் நிற்கின்றனர். எனது காதுக்குள் மிக இரகசியமாக இரஞ்சித் சொன்னான். திரவியம் என்பதுதான் சிவகுமாரன். ஆயுத மூலமே இனி விடுதலை என்று, இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போராளி. பொலிஸ் அதிகாரிக்கே குண்டு வைத்தவன். தற்போது தலைமறைவாக இங்குதான் எங்கோ வாழ்ந்து வருகின்றான். பொலிசார் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அலைகின்றனர்.

சிவகுமாரனின் உடல் உரும்பராயில் தகனம் செய்யப்பட எடுத்து வரப்பட்டது. வழமையாக ஒருவர் ஊரில் இறந்தால் எனது வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஒரு நூறு, இருநூறு பேர்கள் செல்வார்கள். ஆனால், சிவகுமாரனின் உடல் தகனத்துக்காக எடுத்து வரப்பட்ட போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எனது வீதிவழியாகச் சென்றனர். எனது ஊர் மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், யுவதிகள் அணி திரண்டு வந்திருந்தனர்.

பனைகளும் வடலிகளும் கொய்யா மரங்களும் முள்ளு மரங்களும் எந்த வித தடைகளும் இன்றி மிக சுதந்திரமா தங்கள் விருப்பப்படி வளர்ந்து இருந்த எனது கடைசி வளவின் எல்லையிலே அந்த மயானம் இருந்தது. உயரமான ஒரு கொய்யா மரத்தின் உச்சியில் ஏறி, தாய் நிலம் பிளந்து தந்த வீரனின் இறுதி நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சிவகுமாரன் இருக்கும் போது ஒரு புதிய வழியைக் காட்டினான். அது மட்டுமல் இல்லாமல் போன பின்னரும் அவன் புதிய வழிமுறைகளை எழுதிச் சென்றான். தமிழர்களின் முறைப்படி பெண்கள் யாருமே மயானத்துக்குச் செல்லக் கூடாது. அவர்கள் படலி வரை மட்டுமே வருவார்கள். ஆனால், சிவகுமாரனின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்ற மயானத்தில் பல நூறுக்கும் அதிகமான பெண்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அதற்கு மேலாக சிவகுமாரனின் இறுதி முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூக்குரல் இட்டனர். வழமைப்படி பெட்டியில் அடைக்கப்பட்ட உடல் மீண்டும் திறந்து பார்க்க அனுமதிக்கப்படாது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு இணங்கி அந்த வீரனின் உடல் ஒரு வானின் உச்சியில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி பா.உ நவரத்தினத்தினம் உட்பட சில பா.உ க்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் காண்பிக்கப்பட்டது. குழந்தைத் தனமான அந்த முகத்தை கண்டதும் எல்லா மக்களும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்கள். எல்லார் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. சிலர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. அவனை வெறித்துப் பார்த்தார்கள். அவர்கள் மனதில் வைராக்கியம் வளர்ந்தது.

கடைசியில் நான் ஏறி இருந்த கொய்யா மரத்தின் அடியில் இருந்து சுமார் பத்து அடி தூரத்தில் அந்த வீரனின் தியாக உடல் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த அக்கினியை வெகு நேரமாக அந்த கொய்யாமரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். வீடு திரும்ப மனம் இல்லை. ஒருவாறு நமது பங்கு கிணற்றின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.

‘செத்த வீட்டுக்குப் போட்டுவந்து தாகத்துக்கு எனது கையால் கிணத்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சிட்டு போன பெடியங்கள், பழிக்கு பழி வாங்குவோம் என்டு சத்தியம் பண்ணிவிட்டுப் போறாங்கள்’ என்று கண்கள் மலர லாலி மச்சாளின் கணவர் சொன்னார். சந்தோசமாய் இருந்தது.
 ஒரு இந்து மயானத்தில் வழமைக்கு மாறாக ஒரு சமாதி கட்டப்பட்டது. பொன். சிவகுமாரன் என்ற பெயர் அதில் பொறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த சமாதியில் சிவகுமாரனின் தாயர் பூக்களையும் தீபங்களையும் ஏற்றி வைப்பார். சமயத்தில் தண்ணீரும் புல்லு வெட்ட மண்வெட்டியும் எனது வீட்டில் இருந்து கொடுக்கப்படும். இந்த நாட்களில் ஒரு நாள் திடீரென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணிவகுத்து எனது வீட்டைத் தாண்டி மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து மயானத்துக்குச் சென்றேன். அவர்கள் பொன். சிவகுமாரனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் ‘தமிழ் இளைஞர் பேரைவையினர்’ என்றும், அதன் தலைவர் சந்ததியார் என்றும் தெரியவந்தது. அவர்கள் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தந்தை செல்வாவின் ‘தமிழ் ஈழமே இனி நமது இறுதி முடிவு’ என்று முழங்கம் எழுப்பி, காங்கேசன்துறை இடைத்தேர்தலின் இறுதி பிரசாரக் கூட்டத்திற்காக கால்நடையாக முற்றவெளிக்கு செல்லுகின்றார்கள் என்பதும் சந்ததியாரின் பேச்சில் இருந்து தெரியவந்தது.

மந்திரம் சபிக்கப்பட்ட ஒருவனைப் போல அவர்களை நான் பின்தொடர்ந்தேன். சந்ததியாரின் கட்டளைப்படி இரண்டு இரண்டு பேராக வீதியின் ஓரமாக  நாம் நடந்தோம். எனது வீட்டைக் கடந்து நான் செல்லும் போது கூட வீட்டில் இருந்த யாருமே என்னைத்  தடுக்கவில்லை. சந்ததியாரின் தலைமையில் வாகனங்களுக்கு இடைஞ்சல் இன்றி வீதிகளின் ஓரமாக நாம் நடை பயணம் செல்லுகின்ற போது எல்லா வீடுகளில் இருந்தும் மக்கள் படலைக்கு வந்து எங்களைப் பார்த்து மனமார வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் இருந்து தாகத்துக்கு எமக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. பலாலி வீதி வழியாக கோண்டாவில் சந்தியைக் கடந்து நாம் சென்று கொண்டிருக்கும் போது, தடால் அடியாக பொலிசாரின் சில வாகனங்கள் எம்மை வழி மறித்தன. சந்ததியாரின் பின்னால் ஒரு இரண்டடி தூரத்தில் இருந்த எனக்கு சற்று பயமாக இருந்தது.
 ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அதிகாரி சந்ததியாரை கேள்விக்குள்ளாக்கினார். அவருக்கு தமிழ் தெரியாது. சந்ததியாருக்கு சிங்களம் தெரியாது. எனவே, அந்த பொலீஸ் அதிகாரி ஆங்கிலத்தில் பேசினார். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சந்ததியார் கூறினார். உடனே இன்னொரு பொலிஸ் அதிகாரி மொழிபெயர்ப்புக்காக அமர்த்தப்பட்டார்.
 ‘அனுமதி இல்லாமல் ஊர்வலம் போவது சட்ட விரோதம். உடனே கலைந்து செல்லுங்கள்’  என்றார் உதவிப் பொலிஸ் அதிகாரி.

‘இது ஊர்வலம் அல்ல; பஸ்சுக்கு காசு இல்லாதல், தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து செல்லுகின்றோம்.’

‘இது சட்ட விரோதம். போது மக்களுக்கு நீங்கள் இடைஞ்சல் செய்கின்றீர்கள்’.
 ‘நாங்கள் வீதியில் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. ஒரு ஓரமாக நடந்து செல்லுகின்றோம்.’ இது சந்ததியாரின் பதில்.

ஒரு சில நிமிட பேச்சுகளின் பின்னர் சந்ததியார் எதற்கும் மசியாத படியால் பொலிஸ் வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன. நமது கூட்டம் ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஒலி எழுப்பியது. தொடர்ந்து நாம் நடந்தோம். திருநெல்வேலி விவசாய கழகத்தை கடந்து நாம் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் எம்மை வழி மறித்தது. அதில் இருந்து மிக ஆவேசமாக இறங்கி வந்தார் தளபதி அமிர்தலிங்கம் அண்ணா.

‘என்ன சந்ததியார். நீங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு, என்னை முன்வைத்துக் கொண்டு வழங்கிய உறுதி மொழி என்ன?… பிறகு, எப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ஊர்வலம் செய்வீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டார்.

‘அண்ணா! இது ஊர்வலம் இல்லை. பஸ்சுக்கு காசு இல்லாததால் நாங்கள் நடந்து வருகின்றோம்’ என்று மிக அமைதியாக சந்ததியார் பதில் அளித்தார்.

‘சரி அப்படியானால் இப்பவே உங்கள் எல்லாரையும் கூட்டத்திற்கு நான் அனுப்பி வைக்கின்றேன்’ என்று கூறிய அமிர்தலிங்கம், அந்த பலாலி வீதியால் வந்த பஸ், கார் என்று எல்லா வாகனத்தையும் கைநீட்டி மறித்தார். அவருடைய கைகாட்டலுக்கு எல்லா வாகனங்களும் சட்டுப் புட்டு என்று நின்றன. அமிர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று  வழியால் வந்த எல்லா பஸ்களும், ஏதோ ஏதோ வேலைகளுக்காக அந்த வழியால் வந்த கார்களும் எந்தவித ஆட்சேபனையும் இன்றியும், கட்டணங்கள் எதுவும் இன்றியும் எங்களை ஏற்றிக் கொண்டன. ஒரு பத்து நிமிட நேரத்தில் அங்கிருந்த எல்லாரும் ஏற்றப்பட்டனர்.

‘சின்னத் தம்மி… இந்தக் காருக்குள் ஏறுங்கள்’ என்று அமிர் அண்ணா என் தோளைத் தட்டிச் சொல்ல, என்னை ஒரு கார்க்காரர் ஏற்றிக்கொண்டார்.

நாங்கள் எல்லாரும் தந்தை செல்வாவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். தமிழர்களின் உரிமைக்கான முழக்கம் அன்று முத்தவெளியில் எழுப்பப்பட்டது. சுமார்  ஐம்பதினாயிரம் பேர் அதில் கலந்து கொண்டிருப்பார்கள். அந்த நிகழ்வு சுமார் இரவு பத்து மணியளவில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு எப்படி நான் வீடு வந்து சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனது நினைவில் இல்லை.

‘எங்கு போய்விட்டு இந்த அர்த்த இராத்திரியில் வருகின்றாய்’ என்றும் எனது வீட்டில் யாரும் கேட்கவும் இல்லை. எனது வீட்டு நாய் மட்டும் என்னைக் கண்டதும் சத்தமில்லாமல் குதித்து வாலை ஆட்டியது. இரவுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அதற்கும் தெரியும்.

 

ஆல்பெர் காம்யூவிற்கான சிகரெட் – எஸ்.ராமகிருஷ்ணன்

என் இருபத்திமூன்றாவது வயதில் ஆல்பெர் காம்யூவுடன் சேர்ந்து புகைக்க வேண்டும் என்பதற்காக தினம் ஓரு சிகரெட்டை வாங்கி வரத் துவங்கினேன்.  படித்து வேலை தேடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. 

புத்தகமும் தேநீரும் சிகரெட்டும் மனம் முழுவதும் வலியும் கூட இருந்தன. வீடு அந்நியமாகியிருந்தது. நண்பர்களிடம் பேசுவது கூட கூச்சம் தருவதாக மாறியிருந்தது. சிகரெட் மட்டுமே  துணை.  அந்த நாட்களில் நான் மிகவும் தனியனாக இருந்தேன். அந்த கோபம் என் அறையின் புற வெளியில் உலவும் சூரியன் மீது குவிந்திருந்தது. சூரியனை நான் மிகவும் வெறுத்தேன். அதன் திமிர் மற்றும் சுதந்திரம் என்னை வெறுப்பேற்றியது.

உண்மையில் நான் காம்யூவோடு ஸ்நேகம் கொள்வதற்கு சூரியனே காரணமாக இருந்தது. அறையின் தனிமை பல நேரம் சாவை பற்றியே நினைக்க செய்தது. அதனால் நானும் மரணத்தை ஓரு மாபெரும் அபத்தமாக ஊணர்ந்தேன். அந்த நிமிசங்களில் நான்தான்  அந்நியன் வழியாக மெர்சோ என்றும் மனிதனின் அதாவது என் னைப் போன்ற ஓருவனின் கதையை காம்யூ ரகசியமாக எழுதியிருப்பதாகவும் உணர்ந்தேன். தன் எழுத்துக்களை விடவும் காம்யூ மிக அமைதியான மனிதர். அவர் புகைப்படத்தில் சிகரெட் பிடித்தபடியே என்னை பார்த்து கொண்டிருந்தார். அணையாத சிகரெட் அது. அந்த புகை ஏன் அறைக்குள்ளாக சுற்றியபடியே வந்தது.

எனக்கு காம்யூ மிக தேவையாக இருந்தார். சாவு காமம் மற்றும் அன்றாட வாழ்வின் அபத்தம் இந்த மூன்றையும் பற்றி நிறைய நான் யோசிக்க காம்யூவே காரணமாக இருந்தார். நான் சில நேரம் குடிவெறியில் காம்யூவோடு சண்டையிட்டேன். காம்யூ நீங்கள் என்னை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கிறீர்கள் என்று கத்தினேன். ஓவ்வொரு நாளும் அவருக்காக ஓரு சிகரெட் வாங்கி வர துவங்கினேன். அதை அறையின் மேஜையில் போட்டுவிட்டு அவர் விரும்பிய நாள் அதில் ஓன்றை எடுத்து புகைக்க கூடும் என்று காத்திருந்தேன்.

ஒரு இரவு சாலையோர கடையொன்றில் சாப்பிட்டு திரும்பும் போது ஓரு சிறுமி, முதியவன் ஓருவனின் காலைபிடித்து கெஞ்சி கொண்டிருப்பதை கண்டேன். யார் அவள் ஏதற்காக கெஞ்சுகிறாள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் கண்களில் இருந்த துக்கம் என்னை நடுங்க செய்தது. நான் அந்த இணை கொல்ல விரும்பினேன். அவன் சிறுமியை உதைத்து தள்ளிவிட்டு பைக்கை எடுத்து சென்றான். நான் சிறுமியின் அருகில் சென்ற போது அவள் தாங்கமுடியாத ஆத்திரத்துடன் என்னை தாக்க துவங்கினாள். அவளிடம் எப்படி நடந்துகொள்வது என்று எனக்கு தெரியவில்லை.

நான் இதற்காக காம்யூவைத் தேடினேன். அன்றிரவு என் அறையில் நான் காம்யூவோடு பலத்த விவாதம் செய்தேன். காம்யூ மனிதனின் ஒரே பிரச்சனை அவனது இருப்பு தான் என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் முதன்முறையாக பயங்கொள்ள துவங்கினேன். அதன்பிறகு காம்யூவை மறந்து ஓரு பெண்ணை காதலிக்க துவங்கினேன். சில நேரம் அவளோடு பேசிக் கொண்டிருக்கும்போது காம்யூவின் நினைவு பீறிட்டபடியே இருக்கும். அதைக் காட்டி கொள்ள மாட்டேன். காதலிக்கும் போது தான் மனிதன் அதிகம் பயம் கொள்கிறான் என்ற பரிகாசமான காம்யூவின் குரல் எனக்குள் உரத்து கேட்கும் அதேபெண்ணை திருமணம் செய்து கொண்டு அரசு ஊழியனாக உத்தியோகம் தேடி கொண்டு  காம்யூவை மறந்து போனேன். பின்பு ஓருநாள் அலுவலகம் விட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும்போது காம்யூ நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் பேசினால் என் இயல்புவாழ்க்கை குலைந்துவிடும் என்று பயமாக இருந்தது. நான் காம்யூவினை தெரியாதவன் போல நடந்து சென்றேன்.
அவர் என்னை நோக்கி   ‘தன்னை தானே ஏமாற்றிக் கொள்வது பெரிய கலை’ என்று சப்தமாக  சொன்னார். அன்றிரவு காம்யூவிற்காக ஓரு சிகரெட் வாங்கினேன். அதை என்றைக்கும் போலவே மேஜையின் இழுப்பறையில் போட்டு வைத்தேன்.

காம்யூ என்னைப் பரிகசித்தது எனக்கு வலித்தது. ஆனாலும் என்னால் அழமுடியாது. காரணம் மெர்சோ ஒருபோதும் அழுவதில்லை.

 

அனார் – கவிதை March 27, 2010

Filed under: காலம் இதழ் 34 — kaalammagazine @ 3:47 am
Tags:

ஒரு கவிதையும் :  குறிப்புகள் மூன்றும் 

என் துக்கத்தின்மீது பொழியும்
அளவு கடந்த
முரட்டுத்தனமான பனிப் பொழிவை
உன்னில் சுமத்துவதற்கில்லை

தளர்ந்த மூதாட்டியின் பொறுமையோடு
அதனை அகற்ற முயல்கிறேன்

சூறைக்காற்றினில் மூழும் காட்டுத் தீ
அடங்காமல் எரிகின்றது
உடம்பின் புலன்கள் ஒவ்வொன்றாய்
கருகும் வரை

மனக்கசப்பின் மௌனம்
குருதி அப்பிய வாள்
வேதனையை விடாமல் கீறிக் கொண்டேயிருக்கிறது

என்னால் சகித்துக்கொள்ள முடியும்
சக்திவாய்ந்த பலவானாய்

முதல் காலையில்
அனைத்துமே உண்மைகளாக இருந்தன
அடுத்த காலையில் பொய்த்தன
அனைத்துமே பொய்களாக

இரண்டின் நடுவிலும்
முழுமையாக இருக்கிறேன் நான்

நீ இரண்டிலிருந்தும் தப்பிச் செல்கிறாய்.

நடிப்பும் நடிப்பின்மையும்

சொற்களின் நடிப்பு
நம்முடைய நாடகத்தின் பிரதான பாத்திரம்

நாடகத்தின் ஒரு பகுதி நம்மை நடிக்கின்றது
மறுபகுதியை நாம் நடித்துக்கொள்கிறோம்

உனக்குப் பொருந்திப் போவதும்
நீ தேர்ந்தெடுத்ததுமான பாத்திரங்கள்
‘பத்துக்கால் மிருகம்’
‘பாலியல் மன நோயாளி’

நெருக்கத்தைச் செய்து காட்டும் நாடகம்
குரூரத்தின் காட்சிகளையும்
ஒத்திகை பார்க்கிறது
இறுதிக் கட்டத்தில்
நம்மை நடிக்கின்ற நாடகத்தை
நம்மால் நடிக்க முடியாதுள்ளது

நீ நடிப்பற்ற பாவனையில் இருப்பதாக
என்னை நம்பச்செய்யும் அதே நடிப்பையே
நான் உன்னிடமும் நடித்துக் கொண்டிருக்கிறேன்

எனது நாடக அரங்கேற்றம் மேடைகளற்றது
உனது நடிப்பு சாத்தியமான
எல்லா அரங்குகளையும்
வெற்றிகொள்ளக் கூடியது
வெவ்வேறல்ல உன் நடிப்பும் நடிப்பின்மையும்.

நிறங்களை அழுபவள்

ஏதோ மாயமான பொழுதொன்றிலிருந்து
அவள் கண்கள் நிறங்களை
அழத் தொடங்கின

தினமும் நிறத் திட்டுகள் ஊறிய
தலையணையை சுத்தப்படுத்திவிடுவதற்காக
நடுச் சாமத்தில் துயிலெழுந்து கொள்கிறாள்

இரத்தக் கண்ணீரின்
சிவந்த கறைகளைத் துடைக்க
அடிக்கடி முகத்தைக் கழுவுவதாக
கண்ணீர் கறுப்பாகச் சிந்துவதை மறைக்க
கண்களில் கோளாறு
‘கண் மை’ கரைகின்றது போன்ற
பொய்களைக் கூறுவதாகச் சொல்கிறாள்

எதிர்பாராத நேரங்களில் அது
நீலமாகவும் பச்சையாகவும்
பெருகத் தொடங்குவதால்
ஓடி ஒளிய
எல்லா நேரங்களிலும்
இருட்டை உருவாக்க முனைகிறாள்

குளியல் அறையில் வெள்ளை
சமையல் அறையில் ஊதா
படுக்கை அறையில் மஞ்சளாகி சிந்தி உதிரும்
நிறங்களின் வெம்மை

உலகின் மொத்த நிறங்களும்
அவளது கண்ணீராக மாறிய இப்பொழுதில்
நிறங்களை தீட்டுவதிலும் தேர்விலும்
அதனை விரும்புவதிலும்
அவதானமாக இருங்கள்

பொருத்தமற்ற நிறங்களை
கலப்பதில் எச்சரிக்கையாகவும்
அதேசமயம் பொறுப்பாகவும்
நடந்து கொள்ளுங்கள்

நிறங்களின் ஆன்மாவில்
கரியைப் பூசுவதுபற்றி
நிறங்களை எரியூட்டுவது பற்றிய
தந்திரங்களை தீட்டும் முன்
கண்ணாடியில் ஓர் தடவை உங்கள் கண்களை
கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

…………….

வெகு காலமாக ஒருத்தி
நிறங்களை அழுவது தொடர்பான
கடினமான வேதனை பற்றி
உங்களுக்கு எதுவும் தெரியாது என்றபோதிலும்
உங்களில் ஒருவரே
அதற்கு முழுப் பொறுப்பாளி என்பதையும்
தயவுசெய்து ஞாபகம் வைத்திருங்கள்

…………

க(ரு)றி வேப்பிலை மரத்தில்
அன்பைப் பழகுதல்

கொழுத்த மழைக்காலத்தின் பிறகு
அப்படியே செழித்து அடர்ந்திருக்கும்
இலைகள் மட்டுமேயான
கறிவேப்பிலை மரத்தினை
நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அதை ஓர் அன்பின் பெருவிருட்சமாக

எனது சமையலறை இடதுபக்க மணலில்
அது மிகவும் துணிச்சலுடன் நிற்கிறது
அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப
அதன் இலைகளை ஆய்ந்து செல்கின்றனர்
இலைகள் மணமாகவும் ருசியாகவும்
இருப்பதில் மகிழ்வுடனும் திருப்தியுடனும்

பொறுக்கித்தனமானவர்கள்
இலைகளை ஆய்வதில்லை
திருடியும் கந்துகளை
முறித்தும் விடுகின்றார்கள்

விவரம் அறியாதவர்கள்
மரத்தை எட்டி இழுத்து
குருத்து இலைகளை ஆய்கின்றனர்
குருத்துகள் எளிதில் வாடிவிடக் கூடியன

வியாபாரி வருகிறான்
மரத்தில் எந்தவொரு இலையையும் விடாது
உருவிச் செல்வதே அவனது பேராசை
அவனது தோற்றத்தில் நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும்
அவனது பேச்சில் எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும்

கொள்ளையடிப்பதே அவனது குறி

பின்பு அதே மரம்
அவனே வியந்து மிரளும் அளவுக்கு
துளிர்த்து அடர்ந்து செழித்துவிடும்
எதையுமே இழக்காத மாதிரி

நேற்று மரக்கந்துகளில் சிறு குருவிகள்
அசைந்து விளையாடின

இலைகளுக்குள் புகுந்து மறைந்து
தாவித்தாவி ஏதோவெல்லாம் பேசின
மரத்தின் ஒளிரும் முகம்
பளிச்சிடும் பிரகாசம்
ஒருபோதுமே காணமுடியா
அழகுடன் இருந்தது.

 

ஈழ தேசிய சினிமா: கனவிலிருந்து மெய்மையை நோக்கி – யமுனா ராஜேந்திரன்

I

திரைப்படங்கள் இன்று புவிப்பரப்பும் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், இன்னும் குறிப்பாக தேசம் சார்ந்தும்தான் அதனது அடையாளங்கள்  வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சினிமா, ஐரோப்பிய சினிமா, இலத்தீனமெரிக்க சினிமா, ஆப்ரிக்க சினிமா, ஆசிய சினிமா என்று பொதுவாகக் கண்டமெனும் புவிப்பரப்பு சார்ந்து வகைப்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சினிமாவின் தனித்தன்மை என்பது குறிப்பிட்ட மொழிசார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும, தேசம் சார்ந்தும்தான் வகைப்படுத்தப்படுகிறது.

யுகோஸ்லாவிய சினிமாவுக்கென, ஸ்பானிய சினிமாவுக்கென, கியூப சினிமாவுக்கென, பிரெஞ்சு சினிமாவுக்கென, அமெரிக்க சினிமாவுக்கென குறிப்பிட்ட தன்மைகளும் தனித்தன்மைகளும் உண்டு. இந்தத் தனித்தன்மைகள் என்பது, சினிமாவில் சித்திரிக்கப்படும் மனித வாழ்வை எந்த நெறிமுறையில் குறிப்பிட்ட புவிசார்ந்த படைப்பாளிகள் சித்தரிக்கிறார்கள் என்பதோடு தொடர்பு கொண்டது. அமெரிக்க இந்திய சினிமாக்கள் கனவுமயமான பொழுதுபோக்கு சினிமா எனவும், ஐரோப்பிய சினிமா நியோரியலிசச் சினிமா எனவும், ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளின் சினிமா மூன்றாவது சினிமா எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகைப்படுத்தலில் குறிப்பிட்ட சினிமா செயல்படும் நிலப்பரப்பின் அரசியலும் கருத்தியலும் முரண்பாடுகளும் முக்கியமான பாத்திரம் வகிக்கிறது.

உலக அளவில் தமது அடையாளத்தையும் கலாச்சாரத் தனித்துவங்களையும் நிலைநாட்ட முயலும் நாடுகள் அனைத்துமே தேசிய திரைப்படக் கழகங்களை அமைத்து திரைப்படத்தை ஒரு நிலைநாட்டபட்ட தொழில்துறையாகவும் நிறுவனமாகவும் ஆக்கியிக்கின்றன என்பது வரலாறு. ரஷ்யா, கியூபா என புரட்சிகர அரசுகள் துவங்கி, அமெரிக்கா, பிரித்தானிய என முதலாளித்துவ அரசகள் ஈராக, இந்தியா இலங்கை என இரண்டு அரசியல் அமைப்புக்களுக்கும் இடைப்பட்ட நாடுகள் வரை தேசிய திரைப்படக் கழகங்களைக் கொண்டிருக்கின்றன. தேசியக் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்க ஊக்குவிப்பது. திரைப்படக் கலை தொடர்பான பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்குவது, உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தமது நாடுகள் சார்பாகத் திரைப்படங்களை அனுப்புவது போன்றவற்றை அந்தந்த நாடுகளின் தேசிய திரைப்படக் கழகங்களே முன்னின்று செய்கின்றன.

உலகப் புரட்சிகர சினிமாவின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், புரட்சிகள் நடந்து முடிந்த பின்னால் புரட்சியின் போது நிகழ்ந்த சாகசங்கள் பிற்பாடாகத் திரைவடிவம் (பெர்லின் வீழ்ச்சி மற்றும் பேட்டில்ஷிப் போதம்கின்) பெற்றிருக்கின்றன. புரட்சி அரசு அமைந்த பின்னால் தமது எதிர்காலக் கனவு சமூகத்தின் சாத்தியங்கள் பற்றிய இலட்சியத் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 

புரட்சிகர சமூகங்களின் உள்ளார்ந்த முரண்பாடுகளைச் சித்திரித்த திரைப்படங்கள் என்பது, கியூப இயக்குனர் கிதராஸ் அலியாவின் அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான திரைப்படங்கள் என்கிற விதிவிலக்கு தவிர (டெத் ஆப் பியூராக்ராட் மற்றும் குன்டனாமோ), லெனினது அல்லது ஸ்டாலினது ரஸ்யாவிலோ அல்லது மாவோவினது சீனாவிலோ அல்லது ஹோசிமினது வியட்நாமிலோ நாம் விமர்சனபூர்வமான சினிமாவைப் பார்க்க முடியாது.

சாகச சினிமா என்பதுதான் புரட்சியின் ஆரம்பக் காலகட்டங்களில் நிலைபெற்ற ஒரேயொரு திரைப்பட வகையினமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் கீழான இடைக்கால அரசிலும் (defacto state) இதுதான் நடைமுறையாக இருந்தது. திரைப்படத்தின் வல்லமையை லெனினும் பிடலும் அறிந்திருந்தது போலவே, ஈராக்கின் சத்தாம் குஸைனும், வட கொரியாவின் கிம் இல் சுங்கும் உணர்ந்திருந்தார்கள். அரசுத் திரைப்படக் கழகத்தை இவர்கள் புரட்சி வாகை சூடியவுடன் உருவாக்கினார்கள்.

II

ஈழப் போராட்டம் உக்கிரம் பெற்றதன் பின் வெளியாகின சிங்களத் திரைப்படங்களில் சர்வதேசிய ரீதியில் கவனம் பெற்ற அல்லது உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற சிங்களப் படங்களில் பெரும்பாலானவை தமிழ் இனப் பிரச்சினையின் விளைவுகளைப் பேசிய திரைப்படங்களாகவே இருக்கின்றன. அந்தப் படங்கள் பெரும்பாலானவை இலங்கையின்  தெற்கிலிருந்த கிராமங்களிலிருந்து கொழும்பு, அனுராதபுரம் போன்ற நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள ஆண்களும் பெண்களும் பற்றிப் பேசியது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். தமது குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பதற்காகக் கிராமப்புறத்துப் பெண்களின் இடப்பெயர்வு என்பது இரு வகைகளில் நிகழ்கிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றுவதற்காக இளம் பெண்கள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். பிறிதொரு வகையிலான பெண்கள் பகுதியினர் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காகப் புலம் பெயர்ந்தார்கள்.

இலங்கை ராணுவம் என்பது வேலைகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாக ஆகியது. வீட்டிலிருந்து தொலைதூரத்திற்கு விலக்கப்பட்ட சுதந்திர வலயப் பெண்களினதும், ராணுவத்தில் சேரந்த ஆண்களினதும் பொருளியல் வாழ்வில், பாலுறவுப் பழக்கங்களில் இது பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. பொருளாதார ரீதியில் ராணுவத்தையும் சுதந்திர வர்த்தக வலையங்களையும் இளம் பெண்களும் ஆண்களும் சார்ந்திருக்க வேண்டியவர்கள் ஆயினர். சிங்கள சமூகத்தினுள் நேர்ந்த இந்த இடப்பெயர்வு, பொருளியல் மாற்றங்கள், பாலுறவு சார்ந்து எழும் பிரச்சினைகளை இக்காலகட்டத்தில் இயங்க நேர்ந்த திரைப்படைப்பாளிகள் தமது கதைக்களன்களாகத் தேர்ந்து கொண்டார்கள்.

 பிரசன்ன விதானகேயின்  பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் (Death in a Full Moon Day), மற்றும் ஆகஸ்ட சூரியன் (Auguest Sun), அசேகா ஹந்தகமாவின்  இது எனது சந்திரன் (This is My Moon), சுதத் மகதிவேவேவாவின் சாம்பலின் நிழல் (Shadow of the Ashes),  விமுக்தி ஜெயசுந்தராவின் கைவிடப்பட்ட நிலம் (Forsaken Land),  இனோகா சத்யாங்கினியின்  காற்றுப் பறவை (The Wind Bird), சத்யஜித் மைதிபோவின் தாமரைக் குளத்தின் நறுமணம் (Secent of the Lotus Pond)   போன்ற சிங்களத் திரைப்படங்கள்  இக்காலகட்டத்திய பிரச்சினையைப் பேசிய படங்களாக இருக்கின்றன.

 விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமான மோதல் குறித்த படங்களும், சிங்கள வெகுமக்களின் உளவியலில் அது ஏற்படுத்திய பாதிப்புகளைச் சொன்ன படங்களும், இக்காலத்தில் வெளியாகிய பிறிதொரு வகையிலான படங்கள் எனலாம்.  சின்னத் தேவதை (Little Angel)சரோஜா (Saroja), நிறமற்ற பூக்கள் (Colourles Flowers),ஆகஸ்ட் சூரியன் (Auguest Sun), இந்த வழியால் வாருங்கள் (Come Along This Way) போன்ற திரைப்படங்கள் இத்தன்மையானவை. இந்தத் திரைப்படங்களிலும் தமிழரது கோரிக்கையின் நியாயங்களை ஒப்பி, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பேசிய சிங்கள இயக்குனர்களும் இருந்தார்கள். பிரசன்ன விதானகே மற்றும் அசோகா ஹந்தகமா போன்றவர்கள் இத்தகைய இயக்குனர்கள். சமவேளையில் விடுதலைப் புலிகளை, கோரக் கொலை புரிகிற பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து, இலங்கை ராணுவத்தின் வெறியாட்டத்தை தேசபக்த யுத்தம் எனச் சித்திரித்த இயக்குனர்களும் இருந்தார்கள்.  சின்னத் தேவதை, சரோஜா, நிறமற்ற பூக்கள் போன்ற திரைப்படங்களின் இயக்குனர்கள் இவ்வகையினர். துசரா பிரீஸின் பிரபாகரன் திரைப்படம் தமிழர் மீதான துவேஷ சினிமாவின் உச்சபட்டசமான எடுத்துக்காட்டு.

 இலங்கை ராணுவத்தை விமர்சித்த காரணத்தி;ற்காக கடுமையான தணிக்கையை சிங்களத் திரைப்படக் கலைஞர்கள் எதிர்கொண்டார்கள். இவர்களது படங்கள் அனைத்தும் இலங்கையில் தடைசெய்யப்பட்டன. உலகத் திரைப்பட விழாக்களில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு போரின் நிஜமுகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ராணுவ அதிகாரிகள், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தஹமா, வசுந்தரா போன்றவர்களுக்கு நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்தார்கள். விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, இலங்கை தேசபக்திக்கு எதிராக இவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டார்கள். சிங்கள இனவெறியர்களால் நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளான திரைப்பட இயக்குனராக தர்மசிறி பண்டாரநாயகே இருந்தார். இவரது தூதிக்காவா எனும் நாடகத்தின் பின் அவருக்குக் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

 திரைப்படத்தின் கலை வெளிப்பாட்டு வடிவம் எனும் அளவில் மனோரதியத்தையும், உணர்ச்சிகரமான இந்திய-ஹாலிவுட் மரபையும் தாண்டிய ஒரு யதார்த்தவாத மரபு சிங்களப் படங்களுக்கு இருந்தது. யதார்த்தவாத சினிமாவின் இலங்கை வாரிசாக லெஸ்டர் ஜேம்ஸ்பிரீஸ் குறிப்பிடப்படுகிறார். அவரது கெம்பரலிய இலங்கையின் யதாரத்தவாத சினிமா மரபுக்கு ஒரு சான்றாக இருக்கிறது. விதானகே, ஹந்தஹமா, வசுந்தரா, சத்யாங்கினி போன்ற போன்றவர்கள் இந்த யதார்த்தவாத மரபைத் தொடரும் இயக்குனர்கள் எனச் சந்தேகமின்றிச் சொல்லலாம்.

 III

 விடுதலைப் புலிகளின் திரைப்படங்களை இருவகையிலானவர்கள் உருவாக்கினார்கள். திரைப்படக் கலையில் ஆளுமை கொண்டவர்கள் போர்க்கால சமூகம் பற்றிய பிரச்சினைகளைச் சித்தரித்த காற்றுவெளி படத்தை தமது சுயாதீனமான பார்வையில் உருவாக்கினார். காலஞ்சென்ற இயக்குனர் ஞானரதன் இவ்வாறான ஆளுமையாக இருந்தார். பிரச்சாரம் என்பது இவரது படங்களில் பின்தள்ளப்பட்டிருப்பதை பார்வையாளன் அவதானிக்க முடியும். குருதிச் சன்னங்கள் பிறிதொருவகை திரைப்படம், விடுதலைப் புலிகளின் போர்பிரச்சாரத்தினது பகுதியாக தொழில்முறையிலான போராளிகளால் உருவாக்கப்பட்ட முழுநீளப் படம்.

 விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சியான நிதர்சனம் இந்தத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டன. இந்தத் திரைப்படங்களில் பெரும்பாலுமானவை குறுந்தகடுகளாக உருவாக்கப்பட்டு, தேர்ந்தேடுத்த திரைப்படங்கள் ஐரோப்பிய நாடுகளின் ஈழத் தமிழர்களின் திரைப்பட விற்பனை நிலையங்களிலும் விநியோகிக்கப்பட்டன. தேடித் திரிந்து குறும்படங்களைப் பார்த்தவன் எனும் அளவில், 250 இக்கும் அதிகமான  குறும்படங்களை விடுதலைப் புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள் என என்னால் சொல்ல முடியும்.

 புரட்சிகரப் படங்களிலும், வட கொரிய மற்றும் சீனப் படங்களுக்கும், ஐரோப்பிய இலத்தீனமெரிக்க ஆப்ரிக்கப் படங்களுக்கும் நம்மால் வித்தியாசத்தைக் காண முடியும். சீன மற்றும் வடகொரியப் படங்கள் உணர்ச்சிவசமான மனோரதியமான படங்களாக இருக்க, ஐரோப்பியர்களதும், ஐரோப்பியர்களால் ஆதர்சம் பெற்ற அல்லது அவர்களால் உதவி வழங்கப்பெற்ற இலத்தீனமெரிக்க மற்றும் ஆப்ரிக்கக் கிளர்ச்சிப் படங்கள் யதார்த்தவாதப் பண்பைக் கொண்டிருப்பதையும் நாம் காணவியலும். ஐஸன்ஸ்டீன், ஜெட்டினோ, செம்பேன் ஒஸ்மான் போன்றவர்களது படங்களை மாவோ காலத்திய சீன மற்றும் கிம் இல் சுங் காலத்திய வட கொரிய அணிவகுப்புப் படங்களோடு ஒப்பிட, ஒருவர் இந்த வித்தியாசத்தை உணர முடியும்.

 விடுதலைப் புலிகளால் தொழில்முறையிலாக உருவாக்கப்பட்ட படங்கள் சீன, வடகொரிய பாணியோடு, தவிர்க்கவியலாத வகையில் ஹாலிவுட் பாணியையும் இணைத்துக் கொண்ட உணர்ச்சிவசமான, மனோரதியமான சாகசப் படங்களாகவே இருந்தன. திரைப்படக் கலையை உணர்ந்த ஞானரதன் மற்றும் பொ.தாசன் போன்ற ஆளுமைகள் உருவாக்கிய படங்களில் ஐரோப்பிய யதார்த்தவாத சினிமாவின் தாக்கம் இருந்தது. ஹாலிவுட்-இந்திய சாகச சினிமாவுக்கான எடுத்துக்காட்டாக குருதிச் சன்னங்கள் திரைப்படத்தையும், ஐரோப்பிய பாதிப்பிலான யதார்த்தவாத சினிமாவுக்கான எடுத்துக் காட்டாக ஞானரதனின் காற்றுவெளி திரைப்படத்தையும், பொ.தாசனின் தமிழோசை திரைப்படத்தையும் நாம் சுட்டலாம். ஞானரதனின் திரைப்படங்களில் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு நெறியின் பாதிப்புகளை நம்மால் உணரமுடியும்.

 தமிழ் சாகசத் திரைப்படமும் உணர்ச்சிவசமான மனோரதிய பாணியும் ஈழத் திரைப்படங்களில் மிகமோசமான பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதைத் திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும். பாரதிராஜா, ஜான்மகேந்திரன், மகேந்திரன், சீமான் போன்றவர்கள் நேரடியாகப் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். ‘ஈழப் பிரச்சினையை முன்வைத்து திரைப்படங்களை உருவாக்குங்கள்’ எனத் தனது கோரிக்கையையும் பிரபாகரன் இவர்களிடம் முன் வைத்திருக்கிறார்.

 மகேந்திரனின் புதல்வரான ஜான் மகேந்திரன் ஈழப் பின்னணியில் இன்னொரு தமிழகக் காதல் கதையைத் தனது ஆணிவேர் திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார். மகேந்திரனின் மேற்பார்வையில் பனிச்சமரம் பழுத்திருக்கு எனும் குறும்படத்தை ஈழத்தின் ஆதவன் திரைப்படக் கழக மாணவர்கள் எடுத்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தினால் உந்துதல் பெற்றவர்கள் தமிழகத்தில் உருவாக்கிய படங்களும் உணர்ச்சிவசமான சாகசப் படங்கள்தான். சீமானின் தம்பி மற்றும் புகழேந்தியின் காற்றுக்கென்ன வேலி மற்றும் செல்வத்தின் ராமேஸ்வரம் போன்ற திரைப்படங்களை இதற்கான சான்றாகச் சுட்டலாம். சீமானின் தம்பி முன்னும் பின்னுமான வசனங்கள் தவிர எந்தக் கருத்தியல் தரிசனமும் அற்ற ஒரு தாதா படமாகவே இறுதியில் எஞ்சி நின்றது. 

 தனிப்பட்ட முறையில் பிரபாகரனை ஆகர்சித்த படங்களாக ஹாலிவுட் சாகச நாயகர்களான சுவர்ஸ்நேக்கர் மற்றும் ஸில்வஸ்ட்டர் ஸ்டோன் போன்றவர்களின் படங்களே இருந்திருக்கிறது. ஹாலிவுட் போர்ப் படங்கள் தமிழ் துணைத் தலைப்புக்களுடன் (with tamil subtitles) விடுதலைப்புலிப் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டப்பெற்றிருக்கிறது.

 IV

 ஈழவிடுதலைப் போராட்டம் தென்னிந்திய சினிமாவிலும் தன்னுடைய பாதிப்புக்களை விட்டுச் சென்றிருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் மிகப் பெரும் பாதிப்புக்களை தமிழ் சினிமாவின் மீது ஏற்படுத்தியிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி திரைப்படம் மிக வெளிப்படையாகவே ஈழப் போராளிகளைப் பற்றிப் பேசியது. ராஜீவ்காந்தியின் படுகொலை தமிழில் குற்றப்பத்திரிக்கை மற்றும் குப்பி, கன்னடத்தில் சைனட், கேரளத்தில் மிசன் நைன்டி டேஸ் (Mission Ninety Days) என நான்கு திரைப்படங்களுக்கான கதைக் களம் ஆகியிருக்கிறது. கன்னத்தை முத்தமிட்டால், தெனாலி, நள தமயந்தி, ராமேஸ்வரம், நந்தா போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் அடைக்கலமாகின ஈழ அகதிகள் பற்றிய திரைப்படங்களாக இருக்கின்றன. 

 தமிழகத் திரைப்படங்களின் அரசியல் உள்ளடக்கம் எனும் அளவில், விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட குறிப்பான, நேரடியிலான, ஈழ அரசியல் தன்மைகள் என்பன தமிழகத் திரைப்படங்களில் இல்லை. சிங்களத் திரைப்படங்கள் பிரச்சினைகளை அணுகுகிற யதார்த்தவாத மரபு என்பதும் தமிழகத் திரைப்படங்களில் இல்லை. ஈழப் பிரச்சினை குறித்த தமிழகத் திரைப்படங்களில் இவ்வகையில் வரலாறும், பிரச்சினை குறித்த யதார்த்தச் சித்திரிப்பென்பதும் இயல்பாகவே தவறி விடுகிறது. தமிழகத்தின் உணர்ச்சிகரமான, சாகசமான சினிமாக் கட்டமைப்புக்குள் ஈழப் பிரச்சினை என்பது காணாமல் போயிருக்கிறது என்பதுதான் நிஜம்.

 தென்னிந்தியாவில் ஈழப் பிரச்சினை பற்றி வந்த திரைப்படங்களில் அரசியல் நீக்கப்பட்டது என்றாலும் கூட நிகழ்வுகளுக்கு நேர்மையாக இருந்த படம் என கன்னடப்படமான சைனட் படத்தையே நாம் சொல்ல முடியும். சைனட் படத்தில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னிருந்த அரசியல், மலையாளப் படமான மிசன் நைன்டி டேஸ் வசனங்களில் இடம்பெறுகிறது.

 ஈழத்திலிருந்து குடிபெயர்ந்த அகதிமக்களின் பிரச்சினைகளைப் பேசிய வாசந்தியின் நாவலான நிற்க நிழல் வேண்டும் சித்திரிக்கிற ஆண்பெண் உறவு சார்ந்த பிரச்சினைகளை அல்லது அரசியல் பிரச்சினைகளைக் கூட ஈழ அகதிகள் குறித்த தமிழ்த் திரைப்படங்கள் சித்தரிக்கவில்லை. தெனாலியும் ராமேஸ்வரமும் லொகேஷனை மட்டும் மாற்றிப் படம் பிடித்த தமிழக சினிமாக் காதல் கதைகள் அன்றி வேறில்லை. தேசிய இனப்பிரச்சின பற்றிய படங்கள் காதலினிடையில் சொல்லப்படுவது போன்று, அப் பிரச்சினை பற்றிய கதையை, குழந்தையின் தத்துப் பிரச்சினை பற்றிய அறம் சார்ந்த பிரச்சினையாக மாற்றிய திரைப்படமாக மணிரத்னத்தின் கன்னத்தை முத்தமிட்டால் நின்றுபோகிறது.

 தமிழகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட அரசியல் என்பதில் என்றும் குறிப்பான அரசியல் இருந்தது இல்லை. செல்வமணியின் குற்றப்பத்திரிக்கையில் இருந்து, ஷங்கரின் முதல்வன் ஈராக, மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து வரையிலான திரைப்படங்கள் வெற்றுவேட்டு தமிழ் அரசியல் சினிமாவுக்கு எடுத்துக்காட்டான இலட்சணங்கள். தமது சொந்த நிலப்பரப்பு சார்ந்த பிரச்சினைகளையே குறிப்பான அரசியல் அறிவுடன், கடப்பாட்டுடன் எடுக்கத் தெரியாதவர்கள், ஈழப் பிரச்சினையை வரலாற்று அறிவுடன் யதார்த்தமாக எதிர்கொண்டு எடுப்பார்கள் என நினைப்பதும் கூட அபத்தம்தான்.

 V

 ஈழமக்கள் இனப்படுகொலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்தும், விடுதலைப் புலிகள் பிற விடுதலை இயக்கங்களை அழித்ததனையடுத்தும், ஈழத்தமிழர்கள் பாரிய அளவில் உலக நாடுகளில் புகலிடம் தேடினார்கள். இந்தியாவில் மூன்று இலட்சம் அகதிகள் இருக்கிறார்கள். கனடா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்பட, ஆப்ரிக்க நாடுகளினுமெனப் பரந்து, 12 இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் உலக நாடுகளில் புகலிடம் தேடினார்கள். கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் ஒரு இலட்சம் மக்கள் எனக் கொண்டால், ஈழத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்த நிலத்திலிருந்து அகன்றுவிட்டார்கள். புகலிடம் தேடிய ஈழமக்களின் வாழ்வு என்பது தமது பூர்வீக நினைவுகளாலும், குடியேறிய நாடுகளில் வாழ்தலுக்கான அடிப்படையான சவால்களையும் ஏற்றது என்பதாகவே அமைகிறது.

 விளிம்பு நிலை மக்களின் மாற்று வாழ்க்கைகளைப் பதிவு செய்யம் குறும்படம் எனும் வகையினம் தமிழகத்தில் இந்தக் காலங்களில் உக்கிரமாக முகிழ்த்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குறும்படங்கள் புகலிடத் தமிழர்களிடத்திலும் அறிமுகமாகிது. குறும்பட விழாக்களும் புகலிட நாடுகளில் நடந்தன. இன்னொருபுறம் ஐரோப்பிய மொழிக் குறும்படங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. தமிழகத்தினோடும் ஈழத்தினோடும் ஒப்பிட, திரைப்படக் கருவிகளைச் சுலபமாகப் பாவிக்கக் கூடிய பொருளியல் வாழ்வும் அவர்களுக்கு அமைந்தது. தமது வாழ்வை, வாழ்வின் சிக்கல்களை, மனப்பிறழ்வை, பிரிவை, தாம் ஈழத்திலிருந்து காவி வந்த வன்முறையை, பாலுறவுப் பிரச்சினைகளை அவர்கள் தமது குறும்படங்களில் பதிவு செய்தார்கள்.

 குறும்படங்களுக்கென பாரிஸ் கலை பண்பாட்டுக் கழகமும், லண்டன் விம்பம் அமைப்பும், சினி சங்கம் அமைப்பும், கனடா சுயாதீன திரைப்படக் கழகமும் போட்டிகளை ஏற்பாடு செய்தன. அருந்ததியின் முகம், ஜீவனின் எச்சில் போர்வை, நிழல் யுத்தம் போன்ற முன்னோடிப் படங்கள் வெளியாகின. அகதி வாழ்வின் தனிமை, தாய் நாட்டுக்கான தமது பொறுப்புணர்வு, ஆண் பெண் உறவில் ஐரோப்பிய வாழ்முறை தோற்றுவிக்கும் சவால்கள் போன்றவற்றை இந்தப் படங்கள் பேசின. தமிழக சினிமாவிலிருந்து விலகி, தமது வாழ்வு குறித்த தரிசனங்களுடன், யதார்த்தவாதத்தையும் தேர்ந்து கொண்டு, புகலிடக் குறும்படங்கள் வெளியாகத்  துவங்கிய காலம் இது.

 அசலான, துயரமான வாழ்பனுபவங்கள். வரலாற்று அனுபவங்கள் அவர்களுக்கு முன் இருந்தது. படைப்பாளிக்கு வேண்டிய கொந்தளிப்பான மனநிலையும் பதட்டமும் கடப்பாடும் அவர்களிடம் இருந்தது. திரைப்படக் கலை சார்ந்து தேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு முன்பாகத் தமிழகத்தின் மனோரதிய மற்றும் சாகசச் சினிமாச் சட்டகம் முன் இருந்தது. ஈழத்தின் சாசகச் சினிமாச் சட்டகமும் அவர்களின் முன் இருந்தது. ஹாலிவுட் தொழில்நுட்ப சினிமாவும் திரில்லர்களும் அவர்களின் முன் இருந்தது.

 இந்த மூன்றுவகையான பண்புகளையும் வெளிப்படுத்தியதாக பின்வந்த புகலிடக் குறும்படங்கள் அமைந்தன. கலைப் பிரக்ஞையும் விமர்சன பூர்வமான அரசியலும் கொண்டவர்களாக மண் படத்தின் இயக்குனர் புதியவன், அருந்ததி, ஜீவன் போன்றவர்கள் இருந்தனர். விடுதலைப் புலிகளின் மனோரதியமான இலட்சிய நிலைபாட்டையும், சாகசங்களையும் முன்னிலைப் படுத்தியவர்களும் இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல்  நோக்கில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆளுமை கொண்ட தனித்தன்மையுள்ள திரைப்படைப்பாளிகள் என எவரும் உருவாகி வரவில்லை. கனடாவில் சமவேளையில் சுயாதீனமான இயக்குனர்கள் தோன்றினார்கள். கனடியத் தமிழ் வாழ்வின் ஆண் பெண் உறவுகளின் சிக்கலை மனுஷி போன்ற படங்களின் வழி சொன்னவராக கனடிய இயக்குரான சுமதிரூபன் உருவானார். கனடாவின் பாட்ரிக் பத்மநாதன் தனது அந்த ஒரு நாள் போன்ற  திரைப்படத்தின் வழி ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன், நேர்த்தியான படத்தொகுப்புடன் கச்சிதமான தமிழ் திரில்லர் குறும்படங்களை உருவாக்கினார்.

 விடுதலைப் புலிகளின் அணுசரனையில் வெளியான திரைப்படங்கள், தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்கள் மற்றும் புகலிடத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அன்றி வடக்கிழும் கிழக்கிலுமாகச் சுயாதீனமான இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட குறும்படங்களும் வெளியாகின. விமல்ராஜின் கிச்சான் ராகவனின்  மூக்குப்பேணி போன்றவை இவ்வகையிலான படங்கள். ‘பீஸ் ரீல்’ எனும் சர்வதேசிய மனித உரிமைத் திரைப்பட ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் மிகுந்த தொழில்நுட்ப உணர்வுடன் தயாரிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை இந்தத் திரைப்படங்களை விநியோகம் செய்தது. வடக்கிலும் கிழக்கிலுமாக போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அவல வாழ்வைச் சொல்வதாக இந்தக் குறும்படங்கள் இருந்தன.

 VI

 சமூகவியல் அடிப்படையிலும் பொருளாதார ரீதியிலும் ஈழப் போராட்டம் சார்ந்து சிங்களவர்களாலும் ஈழத் தமிழர்களாலும் எடுக்கப் பெற்ற திரைப்பட வடிவத்தில் ஒரு மிகப் பிரம்மாண்டமான வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் இதுதான் : சிங்களத் திரைப் படங்கள் அனைத்தும் முழுநீளத் திரைப்படங்களாக இருந்தன. இப்படங்களின் தயாரிப்புக்கான நிதியாதாரங்களை இலங்கையினதும் ஐரோப்பாவினதும் ஜப்பானினதும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கின. சில திரைப்படங்களுக்கு இலங்கை அரசுத் திரைப்படக் கழகம் நிதி வழங்கியது..

 ஈழத் தமிழர்களிள் உருவாக்கிய படங்களில் ஈழ மண்ணிலாயினும் அல்லது புகலிடத்திலாயினும் – தொண்ணூற்றொன்பது சதவீதமானவை குறும்படங்களாகவே இருந்தன. குருதிச் சன்னங்கள், கடலோரக் காற்று போன்று, இரண்டாயிரம் ஆண்டின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஈழ மண்ணின் திரைப்படங்கள் முழு நீளப் படங்களாக இருந்தன. ஜான் மகேந்திரனது இயக்கத்தில், தமிழகத் திரைப்படக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்று, ஈழத்தில் படம்பிடிக்கப்பட்டு, ஈழத்தவரின் நிதியாதாரத்தில் தயாரிக்கப்பட்ட ஆணிவேர் திரைப் படத்தினையே தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனக் குறிப்பிடுகிறார், திரைப்பட ரசனையும் தமிழீழத் திரைப்பட உருவாக்கமும் கட்டுரையை எழுதிய ஈழத் திரைப்படக் கட்டுவீயாசிரியர் அல்பேட் பவுலஸ் (அலை வனையும் உலகு : ஐபிசி தமிழ் பதிப்பு : லண்டன் : 2007). அல்பேட் பவுலஸ் இவ்வாறு கருதுவதற்கான நியாயங்கள் இருக்கவே செய்கிறது.

 தொழில்முறைக் கலைஞர்களால், தொழில்முறைத் தொழில்நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்டு, உலகின் மிகப் பெரிய நகரங்களின் பிரதானமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட, ஈழமக்களின் வாழ்வு குறித்த, ஈழத்தில் படம்பிடிக்கப்பட்ட, ஹைதராபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகிலும் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்ற,  ஈழம் குறித்த முதல் படமாக ஆணிவேர் திரைப்படம்தான் இருக்கிறது. ஹைதராபாத் திரைப்பட விழாவின் திரைப்படத் தேர்வுக் குழவில் இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மாவும், தெலுங்கி மொழியின் பிரபல இயக்குனரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ண வம்சியும் இருந்தார்கள் என்பதும், அவர்கள் ஆணிவேர் திரைப்படத்தின் பின்னுள்ள அரசியல் செய்தியைச் சிலாகித்துப் பேசினார்கள் என்பதும் இத்திரைப்படம் உலக அளவில் பெற்ற அங்கீகாரத்திற்கான சான்றாக இருக்கிறது.

 VII

 சிங்களத் திரைப்படம் நீண்ட காலங்களின் முன்பே தனக்கான தீவிரமான அழகியலைக் கண்டடைந்த, அதிகமான கலைஞர்களைக் கொண்டதாக இருந்தது. பொருளாதார ரீதியிலும் அதற்கான வளங்களும், ஐரோப்பிய நவயதார்த்தவாத சினிமாவின் ஆதர்ஷம் பெற்ற லெஸ்டர் ஜேம்ஸ் பிரீஸ் காலத்திலிருந்தே உலக அளவில் தனது அங்கீகாரத்தையும் அது நிறுவி இருந்தது. ஈழப் போராட்டம் உக்கிரமடைவதற்கு முன்பான காலத்தில் வாடைக் காற்று மற்றும் பொன்மணி போன்ற முழுநீளப் படங்கள் வடக்கில் தயாரிக்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன. சிங்கள சினிமாவின் யதார்த்தவாத மரபின் கூறுகளையும் இந்தப் படங்கள்  கொண்டிருந்தன. பொன்மணி திரைப் படத்தினை சிங்கள இயக்குனரான தர்மசேனா பதிராஜா இயக்கியிருந்தார். அந்த மரபு, தென்னிந்தியா சினிமாவினாலும் இந்திப் படத்தின் ஆதிக்கத்தினாலும் அழிந்தது. தமிழக சினிமாவின் பாதிப்பில் பிற்பாடு ஈழத்தமிழர்களால் படங்கள் உருவாக்கப்பட்டன. வரலாற்றுணர்வும், யதார்த்தவாத உணர்வும் ஈழச் சினிமாவிலிருந்து விடைபெற்றன.

 விடுதலைப் புலிகளின் காலத்தில் ஈழத் திரைப்படங்கள் புத்துயிர் பெற்றன என்றே சொல்ல வேண்டும். சினிமாவைப் பயிற்றுவிப்பதைத் தீவிரமாக அவர்கள் செயல்படுத்தினார்கள். தமிழக சினிமா இயக்குனர்களை அழைத்து தொழில்துறைப் பயிற்சிகளை தமது அணிகளுக்கு அவர்கள் அளித்தார்கள். தமிழக இயக்குனர்களுடன் சேர்ந்து கூட்டாகப் படங்களை உருவாக்க முயற்சித்தார்கள். ஹாலிவுட் படங்களே ஆயினும் திரைப்படங்களுக்கு அவர்கள் தமிழில் துணைத் தலைப்புக்களை உருவாக்கினார்கள். ஈழவிடுதலையையும் போராளிகளின் சாகசத்தினையும் மையமாகக் கொண்டு, ஈழத்திற்கென ஒரு திரைப்படத் தொழிற்துறையையும் திரைப்படக் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற தூரதரிசனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்ததை நாம் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.

 விடுதலைப் புலிகள் பிரதானமாக வரித்துக் கொண்ட திரைப்பட அழகியல், பொன்மணி, வாடைக்காற்று தோற்றுவித்த மரபாக இல்லை. மாறாக, தமிழகசினிமா சட்டகத்திலான உணர்ச்சிவசமான, சாகச சினிமா மரபாகவே இருந்தது. இதற்கான காரணமாக விடுதலைப் புலிகளைப் பாதித்த ரசனையைத்தான் நாம் சுட்டமுடியும். ஹாலிவுட் படங்களிலும் தமிழக சினிமாவிலும் பிரபாகரனுக்கு இருந்த ஈடுபாடு, ஐரோப்பிய நவயதார்த்தவாத சினிமாவிலோ மற்றும் மூன்றாமுலகின் மூன்றாவது சினிமாவிலோ அல்லது மூன்றாமுலக புரட்சிகர சினிமா மரபிலோ அவருக்கு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. இந்த நிலையிலேயே ஞானரதன் பொ.தாசன் போன்ற ஆளுமைகள் தமது தனிப்பட்ட ரசனை சார்ந்த பண்பினால் அத்தகைய யதார்த்தவாத சினிமாவை விடுதலைப் புலிகளின் திரைப்படக் கலாச்சார அமைப்புக்குள்ளாகவே முயன்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவ்வகையிலான விமர்சன உணர்வு கொண்ட திரைப்பட விமர்சகர்களாக விடுதலைப் புலிகளின் அதரவாளர்களிலும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகவே பேட்ஸ் பவுலசின் பார்வைகள் இருக்கிறது. தமிழக ஹாலிவுட் சினிமாவின் பாதிப்புக்குள்ளான ஆணிவேர், குருதிச் சன்னங்கள் போன்றனவற்றுக்கு மாற்றாக, அவர் ஞானரதன் மற்றும் பொ.தாசன் போன்றவர்களின் திரைப்பட மரபைச் சுட்டி, ஈழத்துக்கான தனியான திரைப்பட அழகியல் மரபை நோக்கிச் செல்வது குறித்துப் பேசுகிறார்.

 VIII

 ஈழப் போராட்டமும், அதனது உடன் விளைவுகளான இடப் பெயர்வும், வன்முறையும் உலக அளவிலான திரைப்படத்திலும் பாதிப்புகளைச் செலுத்தியிருக்கிறது வெல் கம் டு கனடா (Welocme To Canada) எனும் திரைப்படத்தினையும் நோ மோர் டியர்ஸ் ஸிஸ்டர் (No More Tears Sisters) எனும் திரைப்படத்தினையும் கனடிய திரைப்படக் கழகம் தயாரித்து வெளியிட்டது. உயிராபத்துக்களினிடையிலும் பல்வேறு துயர்களினிடையிலும் கனடாவுக்கு வந்து சேரும் ஈழத் தமிழ் அகதி மக்கள் பற்றிய திரைப்படம் வெல் கம் டு கனடா. விடுதலைப் புலிகளால் கொல்லபட்ட மனித உரிமையாளரும் உடல்கூற்று மருத்துவ அறிஞருமான ரஜனி திரணகமாவின் வாழ்வு பற்றிய திரைப்படம் நோ மோர் டியர்ஸ் ஸிஸ்டர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு, அரசியல் அணுசரனையும் வழங்கினார்கள் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்பெறும் நார்வே அரசாங்கத்தின் நார்வே திரைப்படக் கழகம் விடுதலைப் புலிகளின் பெண் கரும்புலிகளைப் பற்றி மை டாட்டர், டெரரிஸ்ட் (My Daughter, Terrorist) எனும் விவரணப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

 இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களும் மலையாளத் திரைப்பட ஆர்வலர்களும் இணைந்து, மலையாள இயக்குனரான ராஜேஷ் டச்ரிவரின் இயக்கத்தில்  இன் நேம் ஆப் புத்தா (In The Name of Budhdha) எனும் திரைப்படமும் உருவாகி இருக்கிறது. புத்தனின் பெயரால் திரைப்படம், ஆவணப்படமும் கதைப்படமும் முயங்கியதான ஒரு சொல்நெறியில் கேரளத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையையும் அதற்கெதிரான விடுதலைப் புலிகளின் அரசியலையும் கொண்டு சேர்த்த படமாக புத்தனின் பெயரால் திரைப்படம் இருந்தது. மிகுந்த பொருட்செலவிலும் தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களாலும் உருவாக்கப்பட்ட படமாக அது இருந்தது. உலகின் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படமாகவும் அது இருந்தது.

 மேற்கிலிருந்து சென்று தமிழகத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈழத்தின் கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் புதியவனின் மண். தமிழகத் தொழல்நுட்பக் கலைஞர்களுடன் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பிறிதொரு குறுந்திரைப்படம் ரவீந்திரன் பிரதீபனின் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம். தமிழகத்திலிருந்து ஈழம் சென்ற சென்ற ஜான் மகேந்திரன் இயக்கிய திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மேற்பார்வையில் ஈழத்தில் உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம் பனிச்சமரம் பழுத்திருக்கு. இரண்டாயிரமாம் ஆண்டில் சகல விதத்திலும், ஈழத்தமிழர்கள் அனைவரிடமும், புகலிடத்திலாயினும் ஈழத்திலாயினும் நேர்ந்த முக்கியமானதொரு திரைப்படம் குறித்த பண்பு மாற்றத்தை இந்த முயற்சிகள் சுட்டி நிற்கின்றன. விடுதலைப் புலிகளும் சரி, விடுதலைப் புலிகளின் ஆதரவிலான அதனது விமர்சகர்களும் சரி, தமிழகச் சினிமாவின் தொழில்நுட்பத் தேர்ச்சியாளர்களை இணைத்துக் கொண்ட வகையில் பரந்துபட்ட பார்வையாளர்களுக்காக தொழில்நுட்ப நேரத்தியுடன் திரைப்படங்களை உருவாக்கத் தலைப்பட்ட காலம் இது.

 IX

 தமிழீழத் தேசிய சினிமா அல்லது ஈழத் தமிழ்மக்களுக்கான தனித்தன்மைகள் கொண்ட சினிமா எனும் தேடலில், தமது அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாலும், ஈழத் திரைப்படக் கலைஞர்கள் பொதுவாக ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஈழத்துக்கான தனித்த சினிமா குறித்த கோட்பாட்டு முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள.; யதீந்திரா ( Inquest of an Indigenous Cinema for Tamil Eelam : Jathindra : Northeastern Monthly : December 2005), அல்பேட் பவுலஸ் ( திரைப்பட ரசனையும் தமிழீழத் திரைப்பட உருவாக்கமும் : அலை வனையும் உலக :  லண்டன் 2007) போன்ற ஈழத்து விமர்சகர்களும், அருந்ததி, ஜீவன் மற்றும் ஜெகாதரன் போன்ற புகலிட ஈழத் திரைப் படைப்பாளிகளும் (புகலிடத்தமிழ் சினிமா: முகம் பதிப்பாகம் : பாரிஸ் :2000) இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிற ஆளுமைகளாக இருக்கிறார்கள்.

 யதீந்திரா, தமிழீழ சினிமா என்பது குறித்த எந்தவிதமான கோட்பாட்டு முயற்சிகளும் இரண்டு வரலாற்று யதார்த்தங்களைக் கணக்கிலெடுத்ததாகவே அமைய முடியும் என்கிறார். முதலாவதாக, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வையும் அவர்களது இருத்தலையும் நிச்சியமின்மைகள் சூழ்ந்திருந்த பொழுதில், அனைத்து வகையிலும் சிங்கள தேசியமானது தன்னை வளர்த்துக் கொண்டே இருந்தது. இரண்டாவதாக, ஈழத் தமிழ்மக்களின் கலாச்சாரமானது ஒடுக்குமுறைக்கும் அழிவுக்கும் ஆட்பட்டிருந்தபோது, அந்த அழிவை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சிங்களவர்கள் தம்மை வளர்த்துக் கொண்டனர். சிங்கள சினிமாவின் வளர்ச்சி குறித்த எமது எந்தவிதமான மதிப்பீட்டுக்கும் இந்த இரு நிகழ்வுகளையும் அடிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் யதீந்திரா.

 தமிழக சினிமாவின் தாக்கம்தான் ஈழத்தில் தனித்தன்மையுள்ள ஈழசினிமா உருவாகததற்கான காரணம் என்பதனை யதீந்திரா மறுதளிக்கிறார். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மௌனி போன்றவர்களின் தாக்கம் ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருப்பது போலவே, தமிழக சினிமாவின் தாக்கமும் ஈழத்துச் சினிமாவிலும் ரசனையிலும் இருக்கும் என்கிற உள்ளார்ந்த காரணத்தை யதீந்திரா ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், சிங்கள சினிமாவோடு ஒப்பிட, ஈழ சினிமாவின் பின்னோக்கிய வளர்ச்சியை ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமறையிலிருந்தும் அதனது அரசியலிலிருந்தும் பிரித்துப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்கிறார்.

 தமிழ் சினிமா ரசனை என்பது ஈழத்தமிழர்களின் மீது கொண்ட தாக்கத்தைப் போலவே, அதே அளவு தென்னிந்திய சினிமாக்களும் இந்தி சினிமாக்களும் சிங்கள சினிமாவின் மீதும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. தனித்துவமான சிங்கள சினிமா உருவாக்குவதிலுள்ள நெருக்கடியையும் போட்டியையும் அவர்களும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். எனினும், தனித்துவமுள்ள சிங்கள சினிமாவை எவ்வாறு அவர்களால் உருவாக்க முடிந்தது? அதன் பின்னிருந்த அரசியல் காரணங்கள்தான் என்ன?

 1962 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் முதல் தமிழ்த்திரைப்படமான சமுதாயம் வெளியானது. சி.என்.அண்ணாதுரையின் வேலைக்காரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தினை ஹென்ரி சந்திரவன்சா எனும் சிங்கள இயக்குனர் தயாரித்து இயக்கியிருந்தார். 1989 ஆம் ஆண்டு சர்மிளாவின் இதயராகம் வெளியானது. இஸ்லாமியத் தமிழரான பெரதீனியா ஜூனைதீன் இப்படத்தினை இயக்கியிருந்தார். இடைப்பட்ட 28 ஆண்டுகளில் தோட்டக்காரி, நிர்மலா, பொன்மணி, வாடைக்காற்று, புதிய காற்று போன்ற  26 ஈழத் தமிழ் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இந்தத் திரைப்படங்களில் கலைசார்ந்த கண்ணோட்டம் எனும் அளவில் இருவிதமான பார்வைகள் வெளிப்பட்டன. பொன்மணி மற்றும் வாடைக்காற்று போன்ற திரைப்படங்கள் தமிழகத் திரைப்படங்களிடமிருந்து தம்மை உடைத்துக் கொண்டு, ஈழத்தின் தனித்த யதார்த்தவாதத் தன்மையினைத் தமது படக்கூறுகளாகக் கொண்டிருந்தன. தோட்டக்காரி மற்றும் சர்மிளாவின் இதயராகம் போன்ற திரைப்படங்கள் தமிழகத் திரைப்படங்களின் மனோரதியமான உணர்ச்சி வெளிப்பாட்டை தமது கதைகூறுமுறையாகக் கொண்டிருந்தன. ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்த கூறுகளுடன் எழுந்து வந்து கொண்டிருந்த முயற்சிகள், சிங்கள அரசின் திட்டமிட்ட வகையிலான ஒடுக்குமுறையினால் அழிக்கப்பட்டன.

 1947 ஆம் ஆண்டு முதல் சிங்களத் திரைப்படமான கடுவனு பொருந்துவா வெளியாகியது. 1956 ஆம் ஆண்டு தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் எழுந்தன. இதே காலகட்டத்தில்தான் சிங்கள மேலாதிக்கம் என்பது தமிழர்களின் மீது கலாச்சாரம், கல்வி, பொருளியல் என அனைத்துத் தளங்களிலும் கவியத் துவங்கியது. 1956 ஆம் ஆண்டு வரையிலும் தென்னிந்திய வியாபார சினிமாவையும், இந்திய ஒளிப்பதிவாளர்களையும் சார்ந்திருந்த சிங்களத் திரைப்படத்திற்கு உதவுமுகமாக டபிள்யூ. ஆர். டி. பன்டாரநாயகே பிற மொழிப் படங்களின் மீது பல தடைகளைக் கொண்டுவந்தார். இந்தியாவில் சிங்களத் திரைப்படங்கள் தயாரிப்பது தடைசெய்யப்பட்டது, சிங்களத் திரைப்படங்களைக் கட்டாயமாகத் தியைரங்குகளில் திரையிட சில நாட்கள் ஒதுக்கப்பட்டது. பிற நாட்களிலேயே ‘பிற’ மொழிப் படங்கள் திரையிட அனுமதிக்கப்பட்டது.

 இந்த வாய்ப்பு சிங்களத் திரைப்படக் கலைஞர்களுக்கு ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் ஐரோப்பிய நவயதார்த்தவாத சினிமா மரபில் தாக்கம் பெற்ற லெஸ்டர் ஜேம்ஸ் பிரீசின் ரெகவா திரைப்படம் வெளியானது.  1956 ஆம் ஆண்டு சிங்கள தனிச்சட்டம் கொண்ட வரப்பட்டது, 1972 ஆம் ஆண்டு சிங்களமும் பவுத்தமும் யாப்பினடிப்படையில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அதே 1972 ஆம் ஆண்டு இலங்கைத் திரைப்படக் கழகம் உருவாக்கப்பட்டது.

 எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ் ஆயதமேந்திய அரசியலின் பின், சிங்களக் கலைஞர்களுடன் சேர்ந்து ஈழத் தமிழ்க் கலைஞர்களோ அல்லது முஸ்லீம் கலைஞர்களோ இயங்குவது இயலாமல் போனது. எழுபதுகளின் மத்திய ஆண்டுகளுக்கு முன்பாக, சிங்களத் திரைப்படத்திற்குத் தமிழ்க் கலைஞர்களும் முஸ்லீம்களும் ஆற்றிய பங்கை எவரும் தற்போது குறிப்பிடுவதில்லை. லென்னி மொரோஸ், எஸ்.ராமநாதன், ஆன்டன் கிரிகொரி, நதானிய திரைப்படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான எம்.எஸ். ஆனந்தன்  ஆகிய தமிழர்களும், முஸ்லீம்களான எம்.எஸ்.மஸ்தான், ஜபீர் கே.காதர், எம்.ஏ.கபூர் மற்றும் ஜூபைர் மக்கான் போன்றவர்களும் சிங்களப் படங்களுக்கு பங்களித்து வந்திருக்கிறார்கள் என்கிறார் யதீந்திரா.

 1983 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக்கலவரத்தில் தமிழரான கே.குணரத்தினம் அவர்களால் நடத்தபட்ட மிகப்பெரும் திரைப்படக்களமான விஜயா ஸ்டுடியோ அழிக்கப்பட்டது. தமிழர்களின் திரைப்படக் கொட்டகைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. தமிழகத் திரைப்பட நடிகர்களை மாமியார் வீடு திரைப்படத்தி;ற்காக இலங்கைக்கு அழைத்த தமிழ் இயக்குனர் கே.வெங்கட் கொல்லப்பட்டார். இவர் சிலுக்கு சிறி, பந்துலு, மகா, அம்மே போன்ற சிங்களத் திரைப்படங்களையும் இயக்கியவர். இவ்வாறு தமிழர்களுக்கென தனித்துவ சினிமாவுக்கான வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்ட சூழலில் சிங்கள தேசிய சினிமாவானது வளர்ந்தது. சிங்கள தேசிய சினிமா தனித்துவத்துடன் வளர்ந்ததற்கும் தமிழ் தேசிய சினிமா தனித்துவத்துடன் முன்னெடுக்கப்படாததற்கான அரசியல் காரணங்கள் இதுவேயெனச் சொல்கிறார் யதீந்திரா. அதே வேளையில், சிங்கள சினிமாவில் திறன் வாய்ந்த தனித்துவமுன்ள படைப்பாளிகள் உருவானார்கள் என்பதனையும் அவர் மறுதளிக்கவில்லை.

 X

 ஈழத் தமிழர்களின் தனித்த பண்புடனான ஆதார சினிமா ( Indegenous Eelam Tamil Cinema) வளர்ச்சி பெறதாததற்கான உள்ளகக் காரணமாகச் சொல்லப்படும் தென்னிந்திய சினிமாவின் அல்லது இந்திய சினிமாவின் தாக்கம் எனும் காரணம் சிங்கள சினிமாவுக்கும் பொருந்தும் எனினும், சிங்களத்தின் தனித்துவமான தேசிய சினிமா வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயகே திரைப்படத் தொழில் மட்டத்தில் உருவாக்கிய வேளையில், சிங்களப் படங்களைத் திரையிடுவதற்கென முன்னுரிமை வழங்கி சில நாட்களைக் கட்டாயமாக சிங்களத் திரைப்படங்களைத் திரையிட மட்டுமே ஒதுக்க வேண்டும் எனும் அரசுசார் அரசியல் நிலைபாட்டை சிறிமாவோ பண்டாரநாயகே நடைமுறைப்படுத்தினார்.

 தமிழ் மொழியும், ஈழம் தமிழகம் என தமிழ் மொழித் திரைப்படமும் இவ்வகையில் இரண்டாம் பட்சமானது. சிங்களமும் பௌத்தமும் அரசு அணுசரணையுடன் வளர்ச்சி பெற்றது. தமிழ் மொழியின் வளர்ச்சி அது சார்ந்த மக்களைப் போலவே ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டு பின்தள்ளப்பட்டது. இந்த வகையில், ஈழத் தமிழ் சினிமாவின் பின்னடைவுக்கான காரணத்தையும், அதனது தனித்துவ சினிமா வளராததற்குமான காரணத்தையும், ஈழத் தமிழர்களின் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறை குறித்த ஆய்விலிருந்து பிரிக்க முடியாது என்கிறார் யதீந்திரா.

 ஒடுக்குமுறை அம்சத்தைப் புறந்தள்ளிவிட்டு, ஈழத் தேசியத்தின் தனித்தன்மையுள்ள சினிமாவைப் பற்றி நிச்சயமாகவே நாம் முழுமையாக ஆய்வு செய்யமுடியாது. ஆனால், சிங்களத் திரைப்படத்தின் வளர்ச்சிக்கான காரணம் என்பதனை அரசு சார்ந்த அணுசரனை என்பதனைச் சார்ந்தும் மட்டுமே நாம் முழுமையாக வரையறுக்கவும் முடியாது. திரைப்படத்தை நிறுவனமயமாக்குகிறவர்களின் அல்லது அரசியல் மற்றும் கருத்தியலை வழிநடத்துகிறவர்களின் ரசனை மனப்பான்மையும், வெகுமக்களிடம் ஊறிப்போயிருக்கும் ரசனை மனப்பான்மையும் கூட ஒரு புவிப்பரப்பின் திரைப்படத்தின் தன்மைகளைத் தீர்மானிக்கிறது.

 இதனை இவ்வாறாக விளக்க முடியம் : 1916 ஆம் ஆண்டு கீசக வதம் தமிழ் திரைப்படத்துடன் தமிழ் சினிமாவின் வரலாறு துவங்குகிறது. தமிழக தமிழ் சினிமாவுக்கு 100 வருடங்கள் ஆகப்போகிறது. தமிழக சினிமா, தமிழக அரசு அணுசரனையுடனான தொழில்துறையாக நிறுவப்பட்டுவிட்டது. இந்தியாவில் மும்பைக்கு இணையாக எனில், உலக அளவில் ஹாலிவுட்டுக்கு இணையாகத் தமிழத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தோடு ஒப்பிட கேரளத்திலும் வங்காளத்திலும் கன்னடத்திலும் மராட்டியிலும் ஒரியமொழியிலும் குறைந்த அளவே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த மாநிலங்களில்தான் இந்திய சினிமாவின் மகத்தான ஆளுமைகள் தோன்றியிருக்கிறார்கள். பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா, ஜெயகாந்தன் போன்றவர்கள் தமிழில் இருந்தாலும், தமிழகத்தில் சத்யஜித் ரேயுடனோ அல்லது ரித்விக் கடக்குடனோ ஒப்பிடத்தக்க அளவிலான மாபெரும் கலை ஆளுமைகள் தோன்றவில்லை.

 புனா திரைப்படக் கல்லூரிக்கு அடுத்து, தமிழகத்தில்தான் தமிழக அரசுத் திரைப்படக் கல்லூரி இருக்கிறது. தமிழகத் திரைப்படக் கல்லூரி ஆபாவாணனையும், ஆர்கே.செல்வமணியையும், ரஜினிகாந்தையும் தான் உருவாக்கியது. ஜான் ஆப்ரஹாமையோ அல்லது மணிகௌலையோ உருவாக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆகர்சித்த சினிமாவாக ஹாலிவுட் சினிமாவும் தமிழக மனோரதிய சினிமாவும் தான் இருந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக, சீமான், பாரதிராஜா, மகேந்திரன, ஜான் மகேந்திரன் போன்றோரின் வழியில்தான் நடைமுறையில் ஈழத்தின் தேசிய சினிமாவின் தனித்தன்மைகளும் வரையறை பெற்றன. விரல்விட்டு எண்ணத்தக்க சில படங்கள், ஞானரதன் மற்றும் பொ.தாசன் போன்றவர்களது குறும்படங்களைத் தவிர, நிதர்சனம் தயாரித்த பெரும்பாலுமான குறும்படங்களும் முழநீளப் படங்களும் ஹாலிவுட் பாணியையும் தமிழக மனோரதிய சினிமா பாணியையும் ஒட்டியதாகவே இருந்தன. தமிழீழத்தின் முதல் திரைபடம் எனக் கோரப்படுகிற ஆணிவேர் முழுமையாகவே தமிழ் கதாநாயக சினிமாவின் தன்மையையே கொண்டிருந்தது. தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட குருதிச் சன்னங்கள், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் ரக இந்திய தேசபக்த வகையினத்தை, ஈழத்தேசபக்திக்குப் பெயர்த்ததாகவே இருந்தது.

 திரைப்பட நிறுவனத்தை உருவாக்குபவர்களின் ரசனையிலும், திரைப்படத்தை உருவாக்குபவர்களின் ரசனையிலும், வெகுமக்களின் ரசனையிலும் மாற்றம் வேண்டும் எனும் பிரக்ஞை இல்லாமல், தனித்த தேசியப் பண்புகள் கொண்ட சினிமாவை உருவாக்குவது சாத்தியமில்லை. இந்தப் பிரச்சினையை அல்பேட் பவுலஸ் தனது ‘ஈழத்தமிழ் சினிமா உருவாக்கம்’ குறித்த கட்டுரையில் பேசவே செய்கிறார்.

 ஈழநிலப்பரப்பில் மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் தோன்றிய புகலிட சினிமாவும் இதே விதமான சிக்கலை எதிர்கொண்டது. அருந்ததியின் முகம், ஜீவனின் எச்சில் போர்வை போன்ற யதார்த்தவாத சினிமாக்கள் புகலிடத்தில் ஆரம்பகாலத்தில் தோன்றின. கனடாவிலிருந்து வெளியான அடிக்ட் மற்றும் கோப்பை போன்ற ஒரு சில படங்களைத் தவிர பெரும்பாலுமானவை மணிரத்னம் பாணிப் படங்களாகவும், ஹாலிவுட் தொழில்நுட்பத் திரில்லர் பாணிப் படங்களாகவும்தான் இருந்தன. புதியவனின் குறும்படங்கள் தவிர இலண்டனிலிருந்தும் ஐரோப்பாவிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், விஜயகாந்த ரகப் படங்களாகவும், விக்ரமன் ரகக் காதல் படங்களாகவும்தான் இருந்தன.

 எந்தத் தனித்துவ சினிமாவை விழைகிற சமூகம் ஆயினும், ரசனை மாற்றம் என்பதை நிறுவன மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும், வெகுமக்கள் மட்டத்திலும் தீர்மானகரமாகச் சிந்திப்பது என்பது அந்தச் சமூகத்தின் தனித்துவ சினிமா உருவாக்கத்திற்கு முன் நிபந்தனையாக ஆகிறது. வரலாற்றுத் தரிசனம் கொண்டு, யதார்த்தவாத சினிமா மரபை விழைந்த, ஈழத்தமிழருக்கானதொரு தனித்த திரைப்பட அழகியல் வடிவம் மற்றும் தனித்த திரைப்படக் கலாச்சாரத்தை அவாவிய ஞானரதன் போன்ற கலைஞர்கள் அகாலத்தில் மறைந்துவிட்டார்கள். அவர்தம் கனவு இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கும் புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் நூலிலிருந்து ஒரு கட்டுரை.